திருச்சி: தமிழர்களுக்கு வேலை வழங்க கோரி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சமீபத்தில் பழகுனர் (அப்ரண்டீஸ்) பணியிடத்தில் ஒரே நேரத்தில் வடமாநிலங்களை சேர்ந்த 300 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
எனவே பொன்மலை ரயில்வே பணிமனையில் நியமிக்கப்பட்ட வடமாநில பணியாளர்களை வெளியேற்றி விட்டு, தமிழர்களுக்கு வேலை வழங்கவேண்டும். மத்திய அரசு பணிகளில் ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் அம்மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கே வேலை வழங்கும் சட்டம் இருப்பதை போல், தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு இன்று தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு குவிந்தனர்.
பின்னர், அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேரையும் கைது செய்தனர்.