முகம் எல்லாம் வேகுது.. வரலாற்றில் இல்லாத அனல் காற்று.. சென்னை மக்களை வாட்டி எடுக்கும் வெப்பம்!

சென்னை: சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமான அனல் காற்று தற்போது வீசி வருகிறது.

ஃபனி புயல் ஒடிசாவில் வீசி, ஒடிசாவை நாசம் செய்தது என்றால், தமிழகத்தில் வீசாமலே நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஃபனி புயல் தமிழகத்தை ஏமாற்றி இருப்பதால் மிக கடுமையான வறட்சி இந்த வருடம் ஏற்படும் என்று வானிலை மையம் கணித்து இருக்கிறது.

முக்கியமாக சென்னையில் இந்த வருடம் வறட்சி அதிகம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை இருக்காது

ஃபனி புயல் சென்னையை ஏமாற்றியதால் இந்த வருடம் மழை மிக மிக குறைவாக இருக்கும். கோடை மழையும் பெய்யாது. சென்னையில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

மோசம்

இந்த நிலையில்தான் தற்போது சென்னையில் மிக மோசமான அனல் காற்று தற்போது வீசி வருகிறது. இதுவரை அங்கு வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிக வெப்பத்துடன் அனல் காற்று வீசி வருகிறது. நேற்று காலையிலேயே இந்த அனல் காற்று வீச தொடங்கிவிட்டது. இன்று மிக அதிக வெப்பத்துடன் இந்த அனல் காற்று வீசி வருகிறது.

என்ன காரணம்

ஒடிசாவை நோக்கி நகர்ந்த ஃபனி புயல் தன்னுடன் சேர்த்து வீச வேண்டிய குளிர் காற்றையும் எடுத்து சென்றுவிட்டது. இதனால் சென்னையை நோக்கி மிக சூடான காற்று நகர்ந்து வருகிறது. இந்த சூடான காற்றுதான் தற்போது சென்னையின் வெப்பநிலையை உயர்த்தி, அனல் காற்றாக வீசி வருகிறது.

வெயிலும்

ஒரு பக்கம் அனல் காற்று வீசுகிறது என்றால், இன்னொரு பக்கம் வெயிலும் அதிகம் ஆகி வருகிறது. தற்போது சென்னையில் 45 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. நேற்று சென்னையில் 41 டிகிரிதான் நிலவியது. இன்று ஒரே நாளில் 4 டிகிரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

கத்திரி வெயில்

இந்த நிலையில் நாளையில் இருந்து கத்தரி வெயில் வேறு தமிழகத்தில் துவங்குகிறது. இதனால் சென்னையில் இன்னும் வெப்பநிலை அதிகரிக்கும். இந்த முறை சென்னையில் வெப்பநிலை 48 டிகிரி செல்ஸியஸை தாண்டினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

tamil.oneindia.com

TAGS: