கேரளாவில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் நிக்காப், புர்கா அணிய தடை!

கேரளா மாநிலத்தில் இயங்கும் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

இலங்கையில் மேற்கொண்டு தாக்குதல்களை தடுக்கும் விதமாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை இலங்கை அரசு பிறப்பித்தது. இதில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி பெண்கள் நிக்காப் முக திரைகள், மாஸ்குகள், புர்காக்கள் போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு மக்களை எளிமையாக அடையாளம் காணவும், பாதுகாப்பு கருதியும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் 30ம் தேதி கேரளாவில் பாலக்காட்டைச் சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்பவனும், காசர்கோட்டைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், அகமது அராபத் ஆகியோர் ஜக்ரான் ஹசீம் பேச்சை கேட்டு பயங்கரவாதிகளாக மாறி இருப்பது தேசிய புலனாய்வு அமைப்பின் தொடர் கண்காணிப்பு மூலம் தெரிய வந்தது.

29 வயதான ரியாஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதி ஜக்ரான் ஹசீம் பேச்சுக்களை கேட்டு வந்ததாகவும், அந்த பேச்சின் அடிப்படையில் கேரளாவில் மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரளாவில் உள்ள முக்கிய நகரில் அவன் தற்கொலை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருந்ததை ஒப்புக் கொண்டான்.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் உள்ள முஸ்லிம் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 10 தொழில்முறை கல்லூரிகள், 18 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 12 உயர்நிலைப்பள்ளிகள், மற்றும் 36 சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட 150 கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு காரணமாக வளாகத்திற்குள் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதித்துள்ளது.

இது குறித்து கல்வி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், ‘முஸ்லிம் கல்வி குழுமத்தில் பயிலும் மாணவர்கள் யாரும் எவ்வித முகத்திரைகளையும் வளாகத்திற்குள் அணிய கூடாது. இது நடப்பு ஆண்டின் (2019-2020) புதிய விதிமுறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் உடை நெறிகளில் மாற்றம் செய்யலாம் என கூறியதன்படியே, இந்த முடிவு பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்டுள்ளது. எவ்வித கலாச்சாரத்தையும் பாதிக்க இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்படவில்லை’ என கூறியுள்ளது.

-athirvu.in

TAGS: