“மேடம் உங்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் கோபமாக இருக்கிறார்கள். சீக்கியர்களை உங்கள் பாதுகாப்புக்கு வைக்க வேண்டாம்” என்று உளவுத்துறை அதிகாரிகள் பிரதமர் இந்திராவிடம் கூறினார்கள்.
1984 ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதிவரை சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் அதிரடியாக நுழைந்தது. கோவிலை ஆக்கிரமித்திருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளின் தலைவர் பிந்தரன்வாலே உள்ளிட்ட தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது. சீக்கிய மத குருமார்கள் அடங்கிய தலைமை பீடமான குருத்வாராவை கைப்பற்றுவதற்கு பிந்தரன்வாலேவுக்ுக உதவியவர்தான் இந்திரா.
ஆனால், அவருடைய அட்டூழியம் இந்தியாவுக்கு எதிராக திரும்பி, பாகிஸ்தானைப் போல சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற தனிநாடு வேண்டும் என்கிற அளவுக்கு போயிற்று. அதுமட்டுமின்றி, வழிபாட்டுத் தலத்தையே ஆயுதக்கிடங்காக பயன்படுத்தும் அளவுக்கு சென்றனர்.
எனவேதான், ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் இந்திரா. இது சீக்கியர்கள் மத்தியிலேயே ஒரு பகுதியினர் அதிருப்திக்கு காரணமாக மாறியது. இந்நிலையில்தான், 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி பிரதமர் இந்திரா தனது பாதுகாப்புப் படை வீரர்களாக இருந்த இரண்டு சீக்கியர்களின் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடைக்கண்களாக துளைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
சீக்கிய பாதுகாவலர்கள் அவருடைய பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டதை அறிந்த உளவுத்துறை அதிகாரிகள் இந்திராவை எச்சரிக்கை செய்தார்கள். ஆனால், அவர்களுடைய எச்சரிக்கையை இந்திரா புறக்கணித்தார்.
“எனது நாட்டு வீரர்களை நானே நம்பாமல் போனால், பிறகு யார் நம்புவார்கள்?” என்று கேட்டார் இந்திரா.
ஆனால், இப்போதும் இந்தியாவின் பிரதமராய் இருக்கிறார் ஒருவர். அவரோ இல்லாத ஒரு தகவலை அவரே பீதியைக் கிளப்பும் வகையில் பரப்பிக்கொண்டிருக்கிறார்.
ஆம், இந்தத் தேர்தலோடு அவராகவே காலாவதி ஆகப்போகிற நிலையில், தன்னை கொல்ல காங்கிரஸ் திட்டம் போட்டுள்ளதாக கூசாமல் மேடைகளில் பேசுகிறார் மோடி.
எந்த அளவுக்கு மோடியை மிகப்பெரிய சூராதி சூரன், நிர்வாகப்புலி என்பது உள்ளிட்ட பல்வேறு மாயைகளை கட்டமைத்து பிரதமராக்கினார்களோ, அந்த அளவுக்கு காமெடிப் பீசாக தன்னை வெளிப்படுத்தி கூவிக்கொண்டிருக்கிறார் மோடி! மோடியை பில்டப் செய்ய பயன்படுத்தப்பட்ட சமூக வலைத்தளங்களே இப்போது அவரை காமெடியனாக்கிவிட்டன.
-nakkheeran.in