தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி.. விசாரணை குழு அதிரடி

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை என்று கூறியுள்ள விசாரணை குழு, அந்த புகாரை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்து, 22 நீதிபதிகளுக்கு பிரமாண பத்திரத்தை அனுப்பி வைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த, ரஞ்சன் கோகாய், நீதித்துறை மீதான தாக்குதல் இது என்றும், குற்றச்சாட்டுக்கு பதிலளித்து தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

மேலும், ரஞ்சன் கோகாய் அளித்த பரிந்துரை அடிப்படையில், அவருக்கு, அடுத்த சீனியர் நீதிபதியான எஸ்.ஏ.பாப்டே தலைமையில் இந்திரா பானர்ஜி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய இரு பெண் நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை குழுவின் முன்னிலையில், புகார் அளித்த பெண் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேபோல, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்யும், இந்த குழு முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

விசாரணை முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற, பொதுச் செயலாளர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தலைமை நீதிபதி தொடர்பான புகாரை விசாரித்த, நீதிபதிகள் குழு, தங்கள் அறிக்கையை, மே 5ம் தேதி சமர்ப்பித்தனர். அதில், உச்சநீதிமன்ற முன்னாள் ஊழியர், கொடுத்த புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம், இந்திரா ஜெய்சிங் vs உச்சநீதிமன்றம் என்ற வழக்கின் அடிப்படையில், நீதிபதிகள் விசாரணை குழு அறிக்கையை வெளிப்படையாக வெளியிட தேவையில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: