குழந்தை விற்பனை… அமுதா உப்பட மூன்றுபேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி

ராசிபுரம் அருகே, சட்ட விரோதமாக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, அவருடைய கணவர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில்  சம்பந்தப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காட்டூர் காட்டுக்கொட்டாய் வள்ளியம்மாள் நகரைச் சேர்ந்தவர் அமுதா என்கிற அமுதவல்லி. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக (எப்என்ஏ) பணியாற்றி வந்த இவர், கடந்த 2012ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய கணவர், ரவிச்சந்திரன், ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

அண்மையில் பச்சிளம் குழந்தைகளை பணத்திற்கு விற்பது தொடர்பாக அவர் பேரம் பேசும் வாட்ஸ் அப் ஆடியோ  ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்கட்ட விசாரணையில், அமுதா, குழந்தைகளை சட்ட விரோதமாக பெற்றோர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி விற்பனை செய்து வரும் இடைத்தரகர் என்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் செவிலியர் அமுதா, அவருடைய கணவர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த கும்பலின் இலக்கு பெரும்பாலும், கொல்லிமலையில் வசிக்கும் பழங்குடி மக்கள்தான் என்பதும், அவர்களிடம் ஆசைவார்த்தை காட்டி, குழந்தைகளை சொற்ப விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர் என தெரியவந்த நிலையில் இதுதொடர்பாக கொல்லிமலை பகுதியில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை  நடத்தி வருகின்றனர்.

தற்போது இந்த வழக்கில் கைது செய்தவர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு கொடுத்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்  அமுதா உட்பட மூன்று பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

-nakkheeran.in

TAGS: