தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு – சத்யபிரதா சாஹூ அறிவிப்பு

தமிழ்நாட்டின் 13 வாக்குச்சாவடிகளில் மே 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர் சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு மே மாதம் 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரியில் எட்டு வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூரில் ஒரு வாக்குச்சாவடியிலும், கடலூரில் ஒரு வாக்குச்சாவடியிலும், தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும், ஈரோட்டில் ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமையன்று இரவு தேனி மாவட்டத்திற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டதால், முறைகேடு நடந்திருக்கலாம் என அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்தன. ஆனால், இது வழக்கமான நடைமுறைதான் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

செவ்வாய்க்கிழமையன்று இரவு தேனி தாலுகா அலுவலகத்திற்கு சுமார் 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்து இறங்கின. இந்தத் தகவல் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்குத் தெரியவந்ததும் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

எதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்து இறங்கியுள்ளன, வாக்குப் பதிவு எந்திரங்களை மாற்றுவதற்கு சதி நடக்கிறதா எனக் கூறி போராட்டத்திலும் இறங்கினர். இதையடுத்து அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இன்று தேனி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புதிதாக வந்திறங்கிய வாக்குப் பதிவு எந்திரங்களைத் திருப்பி எடுத்துச் செல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், இன்று காலையில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவைச் சந்தித்த தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரினார்.

-BBC_Tamil

TAGS: