ரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் குறிப்பாக ரயில்வே வேலை வாய்ப்புகள் வட இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கே அதிகம் அளிக்கப்படுவதாக தமிழக கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்தக் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை?

சமீபத்தில் திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் வந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு, வட மாநிலங்களைச் சேர்ந்த 323 இளைஞர்கள் தேர்வுசெய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து தி.மு.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தமிழ் தேசியப் பேரியக்கம் போன்ற அமைப்புகளும் இதனைக் கடுமையாக கண்டித்துள்ளன. தமிழ்தேசியப் பேரியக்கம் இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியது.

ரயில்வே தேர்வுகள் தொடர்பாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது முதல்முறையல்ல. இதற்கு முன்பாக, 2013ஆம் ஆண்டில் க்ரூப் – D பணியிடங்களுக்கு தேர்வு நடந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் முறைகேடு நடைபெற்றதாகவும் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மார்ச் 29ஆம் தேதி நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கின் வாதங்களின்போது தேர்வு தொடர்பாகவும் விண்ணபதாரர்கள் தொடர்பாகவும் தங்களிடம் உள்ள தகவல்களை ரயில்வே நீதிமன்றத்திற்கு அளித்தது.

Railways

2013ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதியன்று தென்னக ரயில்வேயிலும் சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையிலும் 5450 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. ரயில்வே பதவிகளுக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் விண்ணப்பிக்க முடியும் என்பதால், இதற்கு நாடு முழுவதும் இருந்து பெரும் எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் குவிந்தன. ஒட்டுமொத்தமாக 16,94,729 பேர் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பித்தனர்.

ஜெகதீஷ் அழகர் தலைமையிலான தென்னகர ரயில்வேயின் ரயில்வே ரெக்ரூட்மென்ட் செல் (ஆர்ஆர்சி) இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து 11,25,405 பேரது விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டது. விண்ணப்பித்தவர்களில் 3,13,821 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 2,17,556 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

ஆனால், தமிழகத்திலிருந்து விண்ணப்பித்தவர்களில் வெறும் 30 சதவீதம் பேரே அதாவது சுமார் 60000 பேரே எழுத்துத் தேர்வுக்கு வந்திருந்தனர் என ரயில்வேயின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தேர்வுக்குப் பிறகு 12,265 பேர் நேர்முகத் தேர்வுக்காக இறுதிசெய்யப்பட்டனர். இவர்களில் 62 சதவீதம் பேர் – 7598 – தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். 3096 பேர் கிழக்கிந்தியாவைச் சேர்ந்தவர்கள். 1099 பேர் மேற்கிந்தியாவையும் 448 பேர் வட இந்தியாவையும் 24 பேர் மத்திய இந்தியாவையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

மத்திய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

ஆகவே, தென்னிந்தியர்கள் ரயில்வே தேர்வுகளில் புறக்கணிக்கப்படவில்லையெனக் கூறி, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில்தான் திருச்சி பொன்மலையிலும் கோத்தகிரியில் உள்ள போத்தனூரிலும் உள்ள பணிமனைகளில் தொழில் பழகுனர்களாக இணைவதற்காக வாய்ப்புகள் அனைத்தும் வட இந்தியர்களுக்கே வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த தொழில் பழகுனர் வாய்ப்பைப் பெற எவ்வளவு பேர் விண்ணப்பித்தனர், அதில் எவ்வளவு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் போன்ற விவரங்களைத் தர தென்னக ரயில்வே மறுத்துவிட்டது.

தொழிற்சங்க நிர்வாகிகள் அளித்த தகவலின்படி, பொன்மலையிலும் போத்தனூரிலும் சேர்த்து மொத்தமாக 813 பழகுனர் இடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. மொத்தம் மூன்று ஆண்டுகள் இந்த பயிற்சியைப் பெற முடியும். முதலாம் ஆண்டு 5700 ரூபாயும் இரண்டாம் ஆண்டு 6500 ரூபாயும் மூன்றாம் ஆண்டு 7350 ரூபாயும் பயிற்சிக்கான உதவிக் கட்டணமாக வழங்கப்படும்.

ஆனால், இந்தப் பணியிடங்களுக்கு தமிழகத்திலிருந்து பெரிதாக யாருமே விண்ணப்பிக்கவில்லை. இந்த பயிற்சியின்போது தரப்படும் உதவித் தொகை மிகவும் குறைவு என்பது இதற்கு முக்கியமான காரணம். மேலும் இது பயிற்சி மட்டுமே; வேலை வாய்ப்பு அல்ல என்பது மற்றொரு காரணம்.

தென்னக ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் உருவாகும்போது இம்மாதிரி பயிற்சி பெற்றவர்களில் இருந்து 20 சதவீதம் வேலைவாய்ப்புகளை நிரப்ப வேண்டும் என்ற விதி இருப்பதைக் கூறி தொழிற்சங்கங்கள் தங்கள் வட்டாரங்களில் பலரை விண்ணப்பிக்க ஊக்குவித்தன.

இந்த நிலையில், இந்த வாய்ப்புகளுக்கு வட இந்தியர்கள் அதிகம் தேர்வுசெய்யப்பட்டதாகக் கூறப்படுவது உண்மைதான் எனக் கூறும் தொழிற்சங்கவாதிகள், அதற்குக் காரணம் தமிழகத்திலிருந்து பெரிதாக யாரும் விண்ணப்பிக்காததுதான் என்கின்றனர்.

அதேபோல, இந்த வாய்ப்புகளுக்கான தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுவது தவறு எனத் தெரிவிக்கும் அவர்கள், இதற்கு தேர்வே கிடையாது என்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்களைவைத்தே இவர்கள் தேர்வுசெய்யப்படுவதாகவும் கூறினர்.

சென்னையில் உள்ள தென்னக ரயில்வேயின் தலைமையகத்தில் இது குறித்துக் கேட்டபோது, இது தொடர்பாக ரயில்வே தேர்வு வாரியத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பேச முடியும் என தெரிவித்தனர். ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவரைச் சந்தித்து இது குறித்து விளக்கம்பெற முயற்சித்தபோது, அவரும் இது குறித்துப் பேச முன்வரவில்லை.

ஆனால், ரயில்வே வேலை வாய்ப்புகள் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் அளிக்கும் தகவல்கள் தவறானவை என்கிறார் தக்ஷிண் ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் உதவி தலைவரான ஆர். இளங்கோ.

மத்திய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

ரயில்வே தேர்வுகளைப் பொறுத்தவரை, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. குறிப்பாக ரயில்வே தேர்வுகளுக்குத் தயாராவதற்கென சரியான புத்தகங்களோ, பயிற்சி மையங்களோ தமிழகத்தில் கிடையாது எனச் சுட்டிக்காட்டும் இளங்கோ, தமிழகத்திலிருந்து தேர்வெழுத வருகிறவர்கள், இந்தப் பணி குறித்து பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார்.

Presentational grey line

வேலைவாய்ப்பில் தமிழகத்துக்கு துரோகம் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

கடந்த மார்ச் 6-ம் தேதி சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதே நாளில் விருதுநகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலைவாய்ப்பில் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கப்படுவதாக கூறினார்.

“ரயில்வே துறையில் தமிழகத்துக்கு நடக்கும் துரோகங்கள் பல. தென்னக ரயில்வேயில் பிட்டர், மெக்கானிக் உள்ளிட்ட 1765 பணியிடங்களுக்கு ஆளெடுக்க விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், எடுத்தவர்களில் 1,600 பேர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ரயில்வேயில் மட்டுமல்ல, என்.எல்.சி., பாரத மிகுமின் நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில், சுங்கத்துறை போன்ற துறைகளிலும் தமிழகத்தில் வேலை செய்வதற்கு ஆள் எடுப்பதில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது” என்று கூறினார் ஸ்டாலின்.

இது குறித்த செய்தி:

ஊழல் வழக்குகளை காட்டி, அதிமுக-வை மிரட்டி கூட்டணி வைத்துள்ளது பாஜக: மு.க.ஸ்டாலின்

Presentational grey line

க்ரூப் – D எனப்படும் கடைநிலைப் பணிக்குத் தேர்வாகிறவர்கள் உடல் தகுதி சோதனையின்போது பெண்களாக இருந்தால் 400 மீட்டரும் ஆண்களாக இருந்தால் 1000 மீட்டரும் ஓட வேண்டும். 35 கிலோகிராம் எடையைத் தூக்கியபடி 100 மீட்டர் நடக்க வேண்டும். இதையெல்லாம் பயிற்சி இருந்தால் மட்டுமே செய்ய முடியும். பெரும்பாலானவர்கள் அப்படி பயிற்சி எடுத்துக்கொள்வதில்லை என்கிறார் அவர்.

ரயில்வே வேலைவாய்ப்புகளில் உள்ள இடஒதுக்கீடு சார்ந்த ஒரு அம்சத்தையும் இளங்கோ சுட்டிக்காட்டுகிறார். அதாவது ரயில்வேயில் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கென (ST பிரிவு) 7.5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மலைவாழ் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் அவ்வளவு எளிதில் ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் தற்போது 1 சதவீதம் மட்டுமே ST பிரிவினர் எனக் கனக்கிடப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு முழுமையாக ஜாதிச் சான்றிதழை வழங்கினால், ரயில்வேயில் உள்ள 7.5 சதவீத இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான இடங்களை அவர்கள் பெற முடியும் என்கிறார் அவர். இல்லாவிட்டால், இந்த 7.5 சதவீத இடம் முழுவதும் பிற மாநிலங்களைச் சேர்ந்த எஸ்டி பிரிவினருக்கே செல்லும் வாய்ப்பு உள்ளது.

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற மற்றொரு தேர்வையும் இளங்கோ சுட்டிக்காட்டுகிறார். அந்தத் தேர்வில் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதுமிருந்து 62,918 இடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதில் 2,979 பணியிடங்கள் தென்னக ரயில்வேயில் உள்ள பணியிடங்கள். இந்த எல்லாப் பணியிடங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 85 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 89 சதவீதம் பேர் பட்டதாரிகள், பட்ட மேற்படிப்பு படித்தவர்கள், பி.டெக்., எம்.டெக் படித்தவர்களாக இருந்தார்கள். பி.டெக் பட்டதாரிகள் மட்டும் 4,26, 000 பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இதில் தென்னக ரயில்வேவில் உள்ள 2979 பணியிடங்களுக்கு 8941 பேர் உடற் தகுதித் தேர்வுக்காக தேர்வாயினர். இவர்களில் 5800 பேர் – சுமார் 55 சதவீத்ததினர் – தென்னிந்தியர்கள். இவர்களில் 4,000 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

“இதற்கு முக்கியமான காரணம், அந்த மாநிலத்தில் போதுமான அளவில் பயிற்சி மையங்கள் இருப்பதும் ஜாதிச் சான்றிதழ்கள் எளிதாகக் கிடைப்பதும்தான்” என்கிறார் அவர்.

'தமிழகவேலை தமிழருக்கே '- இந்தியளவில் வைரலாகும் ஹாஷ்டேக் பிரசாரம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தான் பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2004ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை தென்னக ரயில்வேயில் 53 ஆயிரம் பேர் பணியில் சேர்ந்துள்ளனர்; இவர்களில் 25-30 சதவீதம் பேர் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மை என்கிறார் இளங்கோ.

காரணம், ரயில்வேயைப் பொறுத்தவரை வேலை வாய்ப்புகளுக்கு அகில இந்திய அளவில்தான் விண்ணப்பங்கள் கோரப்படும். தென்னக ரயில்வேயில் வேலை வாய்ப்புகள் வரும்போது தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டுமெனச் சொல்ல முடியாது; அதேபோல தமிழகத்தில் எழும் வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு மட்டும் தர வேண்டுமெனச் சொல்ல முடியாது. அது சட்ட ரீதியாகவும் சாத்தியமில்லை என்கிறார் அவர்.

'தமிழகவேலை தமிழருக்கே '- இந்தியளவில் வைரலாகும் ஹாஷ்டேக் பிரசாரம்

“ஆனால், பழகுனர் வாய்ப்புகளைப் பொறுத்தவரை கேரளா, கர்நாடகா மாநிலங்கள் ஒரு சட்டத்தை வைத்திருக்கின்றன. அங்கு உருவாகும் பழகுனர் வாய்ப்புகளில் 90 சதவீதத்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அளிக்க வேண்டும். அதே போன்ற ஒரு விதியை தமிழகத்திலும் உருவாக்கலாம். ஆனால், அது பழகுனர் வாய்ப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். வேலை வாய்ப்புகளுக்கு பொருந்தாது” என்கிறார் அவர்.

இது தவிர, தமிழ்நாட்டில் சமீப காலமாக அரசு வேலை வாய்ப்புகள் தொடர்பாக எழுந்துள்ள அலட்சியப் போக்கையும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். கடுமையான போட்டி நிலவும் இந்தத் தேர்வுகளில் வெற்றிபெற, தீவிரமான பயிற்சியும் முனைப்பும் தேவை. தனியார் வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் சூழலில் பல இளைஞர்கள், இந்த அரசுப் பணிகளைப் பெறுவதற்குரிய முனைப்பைக் காட்டுவதில்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். குறிப்பாக, பல வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள்கூட இளைஞர்களுக்குச் சென்றுசேர்வதில்லை என்கிறார்கள் அவர்கள்.

“30 ஆண்டுகளுக்கு முன்புவரை, பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனை முடிந்த பிறகு இது போன்ற தகவல்களும் பொது அறிவு குறித்த தகவல்களும் மாணவர்களுக்கு சொல்லப்படும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளின் நோட்டீஸ் போர்டுகளில் இந்த தகவல்கள் ஒட்டப்படும். ஆனால், தற்போது இவை வெகுவாகக் குறைந்துவிட்டன. வேலை வாய்ப்புத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தரமும் மிக மோசமாக உள்ளது” என்கிறார் கல்வி – வேலைவாய்ப்பு ஆலோசகரான நெடுஞ்செழியன்.

இதேபோல, சமீபத்தில் அஞ்சல்துறை பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டபோது, தமிழ் பாடத்தில் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்று வெற்றிபெற்றனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, இதனை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை செய்துவருகிறது. -BBC_Tamil

TAGS: