ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் கவர்னர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 28 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதுபற்றி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து அரசு 3 முறை அறிவித்த பிறகும் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அறிவு (பேரறிவாளன்) பற்றிய உண்மைகள் வெளிவந்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திருத்தி எழுதிவிட்டேன். அதை அப்படியே எழுதியிருந்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பார் என பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அரசு இனிமேலும் காலம் தாழ்த்தக்கூடாது. உன் மகனை உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பேன் என முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்னிடம் தெரிவித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விடுதலை செய்ய வேண்டும். கவர்னர் உடனடியாக கையெழுத்திட்டு 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முறையாவது நல்லது நடக்க வேண்டும் என கண் கலங்கினார். அற்புதம்மாள்.
-athirvu.in