மொத்தம் 30 குழந்தைகள்.. அதில் 27 குழந்தைகள் அவர்களுடையது…? குழந்தை விற்பனை வழக்கில் வெளிவரும் உண்மைகள்

ராசிபுரத்தில் பணத்திற்கு பச்சிளங்குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்கப்பட்டுளளதாக அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளரான (எப்என்ஏ) அமுதவல்லி, கொல்லிமலை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை வாங்கி, குழந்தையில்லா தம்பதிகளிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக அண்மையில் வாட்ஸ் அப் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்ப அது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை பவர்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக பணியாற்றிய முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர்கள் அருள்சாமி, பர்வின், ஹசீனா, லீலா, செல்வி ஆகிய எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக, அதிகாரப்பூர்வமற்ற வகையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்ததால் முக்கிய குற்றவாளிகளான அமுதவல்லி, முருகேசன், அருள்சாமி ஆகியோரை மட்டும் முதல்கட்டமாக காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்தது.

இது தொடர்பாக சிபிசிஐடி நாமக்கல் மாவட்டம் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் (மே 7, 2019) மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்து நீதிபதி கருணாநிதி, மூவருக்கும் இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து, மூவரையும் காவலில் எடுத்த சிபிசிஐடி காவல்துறை அவர்களை சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வந்தது. எஸ்பி சாமுண்டீஸ்வரி தலைமையில் டிஎஸ்பி கிருஷ்ணன், ஆய்வாளர்கள் பிருந்தா, சாரதா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில்  நடந்த விசாரணையின் அடிப்படையில் இன்று மாலை சேலம் சர்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த ஆரம்ப சுகாதார ஊழியரான சாந்தி என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஓய்வு பெற்ற செவிலியரான அமுதா, உதவியாக இருந்ததாக கூறப்படும் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் அருள்சாமி ஆகியோரிடம் மூன்றாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.

இடைத்தரகர்களான பர்வீன், நிஷா ஆகியோரும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். கைதாகி உள்ளவர்களிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் 24 பெண் குழந்தைகள், ஆறு ஆண் குழந்தைகள் என மொத்தம் 30 குழந்தைகளை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிலும் 27 குழந்தைகள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மூலம் கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வறுமையைப் பயன்படுத்தி வாங்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. குழந்தைகளை விற்றவர்களையும் குழந்தைகளை வாங்கி வளர்ப்பவர்களையும் கண்டறிந்து அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகேசன், அருள்சாமி, பர்வீன், நிஷா, சாந்தி ஆகியோரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

-nakkheeran.in

TAGS: