உடல்நலம் பாதித்த சிறுமிக்காக விமானம் ஏற்பாடு செய்த பிரியங்கா!

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா, உயிருக்குப் போராடிய சிறுமியை மேல் சிகிச்சைக்காக விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைத்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா, உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியின் பொறுப்பாளராக தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பிரசாரம் செய்தபோது, சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியைச் சேர்ந்த சிறுமி அன்ஷு, பிரயாக்ராஜ் நகரில் உள்ள கம்லா நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடுவது குறித்து கேள்விப்பட்டார். சதை வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சிறுமிக்கு அவசர மேல்சிகிச்சை தேவை என்பதையும் அறிந்தார். இதனால் சிறுமிக்கு உதவ முன்வந்த பிரியங்கா, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி விமானத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பிரசாரம் செய்வதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல், முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் ஆகியோர் வந்திருந்த விமானத்தில், அந்த சிறுமி டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமியின் பெற்றோரும் உடன் சென்றனர். மற்றொரு காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லாவும் அதே விமானத்தில் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால், சிகிச்சைக்காக சிறுமி அழைத்துச் செல்லப்பட்டதால், ராஜீவ் சுக்லா ரெயில் மூலம் டெல்லி சென்றார்.

-athirvu.in

TAGS: