-நீரின்றி அமையாது உலகு.. ஆனால் தற்போது குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கிறது தமிழகம். சுமார் 50 ஆண்டு காலம் நீர்நிலைகளைப் பற்றி சிந்திக்காமல் ஆக்கிரமிப்பை மட்டுமே செய்து கொண்டிருந்தவர்களுக்கு இயற்கை நல்ல பாடத்தை புகட்டிவிட்டது. ஏரி, குளம், குட்டை, வாரி, வாய்க்கால் இப்படி நிலடித்தடி நீரை சேமிக்கும் அத்தனை இடங்களும் ஆக்கிரமிப்பாலும், பராமரிப்பு இன்றி தூர்ந்தும் கிடக்கிறது. இதனால் நிலத்தடி நீர் இல்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமல் பல கி.மீ தூரம் காலிக்குடங்களுடன் அலையும் அவல நிலையும் ரூ. 10 லட்சம் செலவு செய்து ஆயிரம் அடிக்கு ஆழ்குழாய் அமைத்தால் அதிலிருந்து தண்ணீருக்கு பதில் அனல் காற்று தான் வருகிறது.
இந்த நிலையில் தான் இன்றைய இளைஞர்கள் தண்ணீர் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இனியும் அமைதியாக இருந்தால் பெய்யும் பருவமழை தண்ணீரும் வீணாகும். ஆந்த தண்ணீரை சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீரை பெற முடியும். இல்லை என்றால் நம் காலத்திலேயே தண்ணீர் இல்லாமல் ஊரைவிட்டே வெளியேறும் அவல நிலை வரலாம் என்று சிந்தித்தனர். அதன் முடிவு தான் குளங்களை சீரமைப்பது.
குளங்களை சீரமைக்க அதிகாரிகளையும் அரசாங்கத்தையும் எதிர்பார்த்திருந்தால் பருவமழையும் பெய்து முடித்துவிடும் என்பதால் இளைஞர்கள் உழைத்து சம்பாதித்த தங்கள் சொந்த பணத்தில் குளம், ஏரி, வரத்து வாரிகளை தூர்வாரும் பணியை தொடங்கிவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், வடகாடு, மறமடக்கி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக ஆயிரம் அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த மாதம் மத்திய அரசு நிதியில் இருந்து கொத்தமங்கலம் கிழக்கு பகுதியில் ஆயிரம் அடியில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றிலும் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் குறைந்துவிட்டதால் தான் இந்த அவலநிலை ஏற்படுள்ளது.
இந்த நிலையில் தான் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி கொத்தமங்கலம் இளைஞர்கள் ஆலோசனை செய்தனர். அப்போது அருகில் உள்ள கீரமங்கலத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க காட்டாற்றில் இருந்து குளம், ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள், மற்றும் குளங்களுக்கு மழைத்தண்ணீர் செல்லும் வரத்து வாய்க்கால்களை இளைஞர்கள் சொந்த செலவில் சீரமைத்து வருவதை பார்த்தனர். அதன்படி கொத்தமங்கலத்திலும் செய்ய திட்டமிட்டு இளைஞர்கள் சொந்த செலவில் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க திட்டமிட்டனர்.
இளைஞர்களின் முயற்சியால் கொத்தமங்கலத்தில் முன்னால் முதலமைச்சர் காமராஜரால் கட்டி பராமரிக்கப்பட்டு வந்த அம்புலி ஆறு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாய்கள் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் புதர் மட்டியும் மண் சரிந்தும் கிடந்தது.
அதனால் முதல்கட்டமாக பருவமழை தொடங்கும் முன்பு காமராஜர் கட்டிய அணைக்கட்டில் இருந்து பிடாரி கோயில் பெரிய குளத்திற்கு செல்லும் கால்வாயை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து பெரிய குளம் கரையை பலப்படுத்தி தண்ணீரை தேக்குவதுடன் கிராமத்தில் உள்ள மற்ற குளங்கள், நீர்நிலைகளுக்கு வரும் வரத்து வாய்க்கால்கள், குளங்களை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணியை இளைஞர்கள் சொந்த செலவில் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து இளைஞர்கள் கூறும் போது.. அம்புலி ஆற்றில் தண்ணீர் சென்ற காலங்களில் கிணற்றில் தண்ணீர் கிடைத்தது. அதை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஆழ்குழாய் கிணறு அமைத்தோம். தற்போது ஆழ்குழாய் கிணற்றிலும் தண்ணீர் இல்லை. அதனால் தான் நிலத்தடி நீரை சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு பருவமழை பெய்தால் கொத்தமங்கலத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் தண்ணீரை தேக்கி பாதுகாப்போம். அதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புகள் உள்ளது, மேலும் கரைகளை பலப்படுத்துவதுடக் கரை உடைப்பை தடுக்க கரை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியும் செய்ய உள்ளோம் என்றனர்.
மேலும் எங்கள் பாட்டன்கள் தான் இந்த குளங்களையும், வாரிகளையும் வெட்டி இருக்கிறார்கள். அதன் பிறகு மறந்து போனோம். ஆதன் விளைவு இப்ப தண்ணீர் இல்லை. இப்போது அதை நினைத்துப் பார்க்கிறோம். பாட்டன் வெட்டி குளங்களை நாம் கரை கட்டுவோம் என்றும். அதன் ஒரு பகுதி தான் இன்று தொடங்கிய பணி என்றனர்.
கீரமங்கலத்தில் தொடங்கி கொத்தமங்கலம் வரை நிலத்தடி நீரை பாதுகாக்க இளைஞர்கள் வரத்து வாய்க்கால், குளம் சீரமைப்பு தொடங்கியுள்ளது போல மற்ற கிராமங்களிலும் விரைவில் தொடங்க உள்ளதாக இளைஞர்கள் கூறுகின்றனர்.
-nakkheeran.in