’இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே’ ஒரு இந்து: கமல்ஹாசன் கருத்து, பாஜக கண்டனம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்ற இந்து என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியினர் இதற்கு கடும் எதிர்வினையாற்றிவருகின்றனர்.

அரவக்குறிச்சி தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மோகன் ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்காக பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு துவங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்விகேட்க வந்திருக்கிறேன் நான் இன்று. இது சமரச இந்தியாவாக சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூவர்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன்” என்று பேசினார்.

அவரது இந்தக் கருத்துக்கு பாரதீய ஜனதாக் கட்சியினர் கடுமையாக எதிர்வினையாற்றிவருகின்றனர். பள்ளபட்டியில் சிறுபான்மை மக்கள் நடுவில் நின்றுகொண்டு மத உணர்வுகளைத்தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் இவர்மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.

தமிழிசை

மேலும், “மகாத்மாவின் படுகொலையை கண்டித்து நாடே பதறியது; கொலையாளி தூக்கிலிடப்பட்டார். ஆனால் அதை இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது விஷமத்தனமானதும் ஆபத்தானதும் கூட. புதிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் கமல், பழையதை கையில் எடுப்பது மத விஷம் பரப்பி வரும் ஓட்டுக்காகத்தானே?” என்று கேள்வியெழுப்பியுள்ள தமிழிசை, “தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் தான் என்று சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர் கமல். ஏனெனில் இதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை!” எனவும் சாடியுள்ளார்.

கமல்ஹாசனின் கருத்தைக் கண்டித்திருக்கும் பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, கமல்ஹாசனை ஜின்னாவின் பேரன் என்று கூறியதுடன், முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம் என்றும் கூறியிருக்கிறார். அத்துடன் முஸ்லிம்களின் ஓட்டுக்காக இந்துக்களை கமல்ஹாசன் இழிவுபடுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

இலங்கை

கமல்ஹாசனால் 1 சதவீத வாக்குகளைக்கூட வாங்க முடியாது என்றும் விஸ்வரூபம் படத்திற்காக இவர் பயங்கரவாதிகள் முன் கேவலம் பணத்திற்காக மண்டியிட்டதை மறக்க முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். “கமலஹாசனை விட அரசியல் விஷம் வேறு யாரும் இருக்க முடியாது. தமிழக அரசியலில் மக்கள் இவரை நுழைய விட மாட்டார்கள்” என்று கூறியுள்ள எச். ராஜா, தொடர்ச்சியாக கமல்ஹாசனைக் கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்து வருகிறார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி ஆதரித்திருக்கிறார். “இந்த நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், இந்து மகா சபா ஆகிய எல்லோருமே மாற்றுக் கருத்துடையவர்களை அழிக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை உடையவர்கள். எப்படி முஸ்லிம் மதத்தில் ஐஎஸ் இருக்கிறதோ, அதே போன்ற அமைப்புதான் ஆர்எஸ்எஸ். ஆகவே நான் கமல் சொன்னதை நான் நூறு சதவீதமல்ல, ஆயிரம் சதவீதம் ஆதரிக்கிறேன்” என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

அதேபோல திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும் கமல்ஹாசன் கூறியது சரிதான் எனக் கூறியிருக்கிறார்.

இந்து தீவிரவாதம் குறித்த கமல்ஹாசனின் கருத்திற்கு ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். “எப்படி கலைக்கு மதம் என்பது இல்லையோ, அதேபோல பயங்கரவாதத்திற்கும் மதம் கிடையாது. கோட்ஸே ஒரு பயங்கரவாதி என நீங்கள் சொல்லலாம். ஏன் இந்து எனக் குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள்? இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் ஓட்டு சேகரிப்பதற்காகத்தான் அப்படிச் சொன்னீர்களா? தயவுசெய்து இந்த நாட்டை பிளவுபடுத்த வேண்டாம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் ஓபராய் கூறியிருக்கிறார்.

இன்று அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால், அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டுமென்றும் அஸ்வினி உபாத்யாயா என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். -BBC_Tamil

TAGS: