சென்னை: வட மாநிலத்தவர் பெருமளவில் ரயில்வே பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கு வசதியாக இனி தாய் மொழியில் பேசக் கூடாது என்றும், ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்றும் ரயில்வே உத்தரவிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் மோதி பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இதற்கு ஒரு ஸ்டேசன் மாஸ்டர் தமிழில் பேசியதை, மற்றொரு வடமாநில ஸ்டேசன் மாஸ்டர் புரிந்து கொள்ளாததே விபத்து ஏற்படும் சூழலுக்கு காரணம் என்பதை ரயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இப்போது தமிழகத்தில் ரயில்வே வேலையில் பெருமளவு வடமாநிலத்தவர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்பதால், இனி அனைத்து ஸ்டேசன் மாஸ்ர்கள் உள்பட பணியாளர்கள் தாய்மொழியில் பேசக்கூடாது என்றும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என ரயில்வே தலைமை நிர்வாக மேலாளர் அனந்தராமன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த மே 10ம்தேதி திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், மற்றும் பாலக்காடு கோட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதன் மூலம் வடமாநிலத்தவருக்கு வசதியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழ் தெரியாமல் எந்த ரயில்வே பணியாளர்களும் தமிழகத்தில் வேலை பார்க்க முடியும் என்ற சூழல் உருவாகிவிடும்.
ஏற்கனவே தமிழ், தமிழர்கள் ரயில்வேயில் புறக்கணிக்கப்படும் நிலையில் ஆங்கிலம்தான் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு வட இந்தியர்களுக்கே அதிகம் சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.