புழல் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பது நிறுத்தம்?.. சென்னையில் தண்ணீர் பஞ்சம் உச்சம்!

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கப்படும் புழல் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பது இன்னும் இரண்டு வாரத்தில் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதால், சென்னையின் தண்ணீர் பஞ்சம் உச்சத்துக்கு சென்றுவிடும் அபாயம் எழுந்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை பொய்ந்து போனதால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு நிலவுகிறது. ஏனெனில் சென்னையைச் சுற்றி இருக்கும் குடிநீர் ஆதார ஏரிகள் எல்லாம் வறண்டு காடுகளை போல் மாறிவிட்டன.

கோடை மழையாவது சென்னைக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் இதுவரை பெரிதாக பெய்யவில்லை. இதனால் சென்னையில் நீர் ஆதாரங்கள் வற்றிப்போனதுடன், நிலத்தடி நீர் மட்டமும் சரிந்துபோனது.

ஜுன் இறுதி வரை

இதனால் சென்னை நகரம் முழுவதுமே மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது நீர் உள்ள புழல், வீராணம் மற்றும் கல்குவாரிகளின் நீரை வைத்து ஜுன் மாதம் இறுதி வரை சமாளிக்க வேண்டி உள்ளது.

800 மிலி தேவை

தற்போது சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளக்கும் புழல் ஏரியில் 45 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. ராட்சத மோட்டார் மூலம் வினாடிக்கு 25 கனஅடி வீதத்தில் 75 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு தினமும் 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை என்கிற நிலையில் 75 மில்லியன் லிட்டர் எந்த அளவுக்கு காணும் என்பதே பெரும் கேள்வி.

புழல் நீர் நிறுத்தம்

இந்த சூழலில் புழல் ஏரியில் இப்படியே தண்ணீர் எடுத்தால் 2 வாரங்களில் முழுமையாக வறண்டுவிடும்.அதன் பிறகு அங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுக்க முடியாது. எனவே தண்ணீர் பஞ்சம் என்பது சென்னையில் மிகப்பெரிய அளவில் ஏற்படும் அபாயம் உள்ளது.

கேள்விக்குறி

இதனால் புதிய நீர் ஆதாரங்கள் மற்றும் கல்குவாரி நீர்களை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். எனினும் இன்னும் குறைந்தது 45 நாட்களுக்கு சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறையை சமாளித்தால் தான் தென்மேற்கு பருவமழை மூலம் தப்ப முடியும் என்ற சூழல் உள்ளது. ஆனால் எப்படி அதிகாரிகள் சமாளிக்கப் போகிறார்கள் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

tamil.oneindia.com

TAGS: