வெளிநாடு தப்பிய 132 பேரை நாடு கடத்த மனு

புதுடில்லி: ‘வங்கி மோசடி வழக்குகளில் சிக்கி, வெளிநாடு தப்பியுள்ள, தொழிலதிபர்கள், விஜய் மல்லையா, நிரவ் மோடி உட்பட, பல்வேறு வழக்குகளில், 132 பேரை நாடு கடத்தும்படி, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது’ என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்ததாக, தொழிலதிபர், விஜய் மல்லையா மீது, வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பிய நாடான, பிரிட்டனுக்கு அவன் தப்பிச் சென்றார் அவரை நாடு கடத்தும்படி, மத்திய அரசு கோரிக்கை வைத்தது. இது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில், 3,600 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, வைர வியாபாரி, நிரவ் மோடி மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரும், பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.நாடு கடத்தும் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, அவர் மீதும் அங்கு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இவர்கள் மீதான வழக்கு களின் நிலவரம் குறித்து, தகவல் கேட்டுள்ளது. அதற்கு, வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

மல்லையா மற்றும் நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்குகள், விசாரணையில் உள்ளன. வழக்கின் விசாரணைக்கு பாதிப்பு வரும் என்பதால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இது போன்ற தகவல் அளிக்க, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இவர்கள் தொடர்பான விபரங்கள் தர இயலாது. பல்வேறு மோசடி வழக்குகள் தொடர்பாக, தங்கள் நாட்டில் உள்ள, 132 பேரை நாடு கடத்தும்படி, பல வெளிநாடுகளுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளில், கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-dinamalar.com

TAGS: