நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் 260 குழந்தைகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் விற்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பிறந்த பல குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று குழந்தைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 4 ஆண்டுகளாக குழந்தை விற்பனை நடந்துள்ளது.
சுகாதாரத்துறை அறிக்கை
இதனால் கடந்த 4 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் தொடர்பாக கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. அதில், நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 300 குழந்தைகள் பிறந்திருப்பதும், அதில் 260 குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளனர்.
260 குழந்தைகள் கதி என்ன?
அந்த 260 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டனராஅல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனதா? அல்லது வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்துவிட்டனரா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
தீவிர விசாரணை
சுகாதாரத்துறையின் அறிக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாயமான 260 குழந்தைகளின் பெற்றோர் முகவரிகளை வைத்துக் கொண்டு சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பெண் தரகர் கைது
இந்நிலையில், குழந்தைகள் விற்பனை வழக்கில் மேலும் ஒரு பெண் இடைத்தரகரான, பெங்களூரை சேர்ந்த ரேகாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ரேகாவை மே 31 வரை சிறையிலடைக்க நீதிபதி தேவி உத்தரவிட்டார்.
சூடுபிடிக்கும் விசாரணை
ராசிபுரத்தில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவள்ளி உள்பட 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மேலும் ஒரு தரகர் கைதுசெய்யப்பட்டுள்ளது விசாரணையை சூடுபடுத்தியுள்ளது.