உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மலைக்கோயிலில் தியானம் செய்ய பிரதமர் நரேந்திர மோதி இன்று, சனிக்கிழமை, காவி உடை உடுத்தி அங்கு சென்றுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
கேதார்நாத் சிவன் கோயிலில் வழிபாடு செய்தபின் இரண்டு கிலோ மீட்டர் தூரம், பனிமலைப் பாதையில் நடந்து, தியானம் செய்யும் குகையை அவர் சென்றடைந்தார்.
மோதி தியானத்தை முடிக்கும் வரை ஊடகத்தினருக்கு அப்பகுதியில் அனுமதி கிடையாது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏ.என்.ஐ தெரிவிக்கிறது.
நாளை, ஞாயிறு, காலை வரை அவர் அங்கு தியானம் செய்வார். தற்போதைய உத்தராகண்ட் பயணத்தின்போது மோதி பத்ரிநாத் கோயிலுக்கும் செல்லவுள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் கேதார்நாத்துக்கு மோதி மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.
கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்துள்ள அந்தக் கோயில் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு தீபாவளியன்று மோதி கேதார்நாத் சென்றது குறிப்பிடத்தக்கது.
-BBC_Tamil