விளை நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயு குழாய்கள்.. நெல் பயிர்கள் நாசம்.. கொந்தளிப்பில் நாகை மாவட்டம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் கெயில் எண்ணை எரிவாயு எடுத்துச் செல்ல விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

நாகை மாவட்டம் மாதனம் முதல் மே மாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளை துவங்கியுள்ளது.

இது அதிகமாக நெல் விவசாயம் மற்றும் பருத்தி விவசாயம் நடைபெறும் பகுதியாகும். ஆனால் நில உரிமையாளர்களிடம் அனுமதி பெறாமல், குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

எரிவாயு குழாய்கள்

சீர்காழி அருகில் உள்ள மாதனம் மற்றும் அதனை சுற்றுப்பகுதியில் ஹைட்ரோகார்பன் எரிவாயுவை தோண்டி எடுக்கும் திட்டத்தை கெயில் செயல்படுகிறது. இப்படி வெளியே எடுக்கப்படும் எரிவாயு, மேமாத்தூருக்கு எடுத்துச் செல்ல குழாய்கள் பதிக்கப்படுகின்றன.

போராட்டங்கள்

குறுவை சாகுபடி பயிர் செழித்து வளர்ந்துள்ளது. நடவு செய்யப்பட்ட நிலத்தில் விவசாயிகள் பாதங்கள் கூட படாமல் பார்த்துக்கொள்வர். ஆனால், பெரிய பெரிய கிரேன்கள், வயல்வெளியில் இறக்கி, அவை நாசம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருவதோடு, பல போராட்டங்களையும் நடத்திவருகின்றனர்.

நாற்றங்கால்கள் நாசம்

இரு தினங்களுக்கு முன்பு தரங்கம்பாடி தாலுகா பகுதியில் கோடை சாகுபடி செய்திருந்த நாற்றங்கால் பகுதியை நாசம் செய்து குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. இதை தெரிந்துகொண்ட விவசாயிகள் தடுத்துநிறுத்தி செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறை டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில் வந்த போலீசார் நடவு வயலை நாசம் படுத்தக்கூடாது என்றுகூறி வேலையை தற்காலிகமாக நிறுத்தினர்.

பொக்லைன்கள்

இது மட்டுமில்லை. காலகஸ்திநாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்காக விதை விட்டிருந்த நிலத்திலும், உழவு செய்த வயல்களிலும் குழாய் பதிப்பதற்கு இயந்திரங்களை இறக்கி நாசம் செய்தனர். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, போலீசிலும் புகார் அளித்தனர். இதேபோல முடிகண்ட நல்லூர் கிராமத்தில் பயிர்கள் வளர வேண்டிய நிலையில் திடீரென பொக்லைன் இயந்திரத்தை நடவு செய்த வயலின் நடுவே கொண்டு வந்துள்ளனர். விவசாயிகள் இயந்திரங்களை அழித்துக்கொண்டு, புதைக்க சென்றனர். அதனை பார்த்து கதறிய விவசாயிகள் இயந்திரங்களை சுற்றிவளைத்து நிறுத்திவிட்டு, போலீசில் புகார் அளித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் ஒலிக்க வேண்டும்

நாகை மாவட்டம் முழுக்க இதுபோன்ற பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது தேர்தல் காலம் என்பதால் தங்களது பிரச்சினைகளை ஊடகங்களில் வெளியாகவில்லை என்ற வருத்தமும் அப்பகுதி மக்களுக்கு இருப்பதை பார்க்க முடிகிறது. சமூக வலைத்தளங்களில் சிலர் இந்த களத் தகவல்களை தெரிவித்து, எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கிறார்கள். தேர்தல் பிரச்சார கூட்டம் முடிந்துவிட்ட நிலையில், இனியாவது, நாகை மாவட்ட ஜீவாதார பிரச்சினையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தலையிடுவார்களா என்ற எதிர்பார்ப்பு அம்மக்களிடம் உள்ளது.

tamil.oneindia.com

TAGS: