திருநங்கை – ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை தொடர்ந்து தூத்துக்குடியில் ஆண் – திருநங்கை திருமணத்தை அங்கீகரித்து திருமண பதிவு சான்று வழங்கப்பட்டது. தூத்துக்குடி சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு 31.10.2018 அன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து திருமணத்தை பதிவு செய்வதற்காக தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகம் சென்றனர்.

அப்பொழுது தமிழக சட்ட விதிமுறைகளின்படி அருண்குமார்- ஸ்ரீஜாவின் திருமணத்தை பதிவு செய்ய இயலாது எனவும், ஆண் மற்றும் திருநங்கை இடையிலான திருமணத்தை பதிவு செய்ய வழிவகை இல்லாததால் அவர்களது திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை என்று சார்பதிவாளர் கூறியதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

ஆனால் அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தங்களின் திருமணத்தை பதிவு செய்து திருமண பதிவு சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு கூறியது. அதில் அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து அவர்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கலப்புத் திருமணத்திற்கு தமிழக அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் அருண்குமார் -ஸ்ரீஜா தம்பதி பெறத் தகுதியானது என்று கூறியும் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமை அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்ய விண்ணப்பம் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரும் அனைவரின் முன்னிலையில் மோதிரம், மாலை மாற்றி கொண்டனர்.அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தங்கள் திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளனர். -BBC_Tamil

TAGS: