ராஜீவ் காந்தி நினைவு தினம்: கொலை வழக்கு கடந்து வந்த பாதை – விரிவான தகவல்கள்

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் இன்று. ராஜீவ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை தொடர்பாக பிபிசி தமிழில் முன்பே பகிரப்பட்ட கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம்.

1991 மே 21: சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.

1991 ஜூன் 11: பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார்.

1991 ஜூன் 14: நளினி கைதுசெய்யப்பட்டார். ஸ்ரீகரன் என்ற முருகனும் கைதானார்.

1991 ஜூலை 22: சுதேந்திரராஜா என்ற சாந்தன் கைதுசெய்யப்பட்டார்.

1998 ஜனவரி 28: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்.

1999 மே 11: விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மட்டும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. 19 பேர் தண்டனைக் காலத்தை முடித்ததாகக் கூறி விடுவிக்கப்பட்டனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

1999 அக்டோபர் 8: தங்களது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமெனக் கோரி நால்வரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

1999 அக்டோபர் 10: தூத்துக் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

1999 அக்டோபர் 29: ஆளுநர் பாத்திமா பீவி இந்தக் கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகக் கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

1999 நவம்பர் 25: ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமெனக் கூறியது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு வந்த பாதை

2000 ஏப்ரல் 19: இந்த விவகாரம் குறித்த மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாககக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது.

2000 ஏப்ரல் 24: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

2000 ஏப்ரல் 26: நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

2000 – 2007: இந்த காலகட்டத்தில் குடியரசுத் தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர்.

2006 செப்டம்பர் 14: பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இருந்தாலும் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோருக்கு இந்த அரசாணை மூலம் விடுதலை கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து நளினி நீதிமன்றத்தை நாடினார்.

2008 செப்டம்பர் 24: நளினியின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல் முறையீட்டிலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2007: குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இருந்த காலகட்டத்தில் இந்த கருணை மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

2008 மார்ச் 19: ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, நளினியை வேலூர் சிறையில் சந்தித்துப் பேசினார்.

2011 ஆகஸ்ட் 12: கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யபப்பட்டதாக குடியரசுத் தலைவர் அறிவித்தார். செப்டம்பர் மாதத்தில் அவர்கள் தூக்கிலிடப்படலாம் என செய்திகள் வெளியாயின.

2011 ஆகஸ்ட்: தங்களுடைய கருணை மனுக்கள் கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டதால் தாங்கள் தினமும் துன்பத்தை அனுபவித்ததாகவும் அதனால், தங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்குத் தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு வந்த பாதை

2014 பிப்ரவரி 18: பல ஆண்டு காலம் மூவரது கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்துசெய்யப்படுவதாக சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

2014 பிப்ரவரி 19: தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்திருந்தால் மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென கூறப்படுவதால் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவதாகவும் மூன்று நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.

2014 பிப்ரவரி: தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது மத்திய அரசு. 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க தடையாணையும் பெறப்பட்டது. சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என்று கூறியது மத்திய அரசு.

2014 ஏப்ரல் 25: இந்த வழக்கில் மத்திய – மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாஸன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

2015 டிசம்பர் 2: மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. ஆனால், 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையெனக் கூறியது. இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் வழக்கைத் தீர்மானிக்க, மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

2016 மார்ச் 2: 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது தமிழக அரசு.

2018 செப்டம்பர் 6: 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாஸனத்தில் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.

-BBC_Tamil

TAGS: