அருணாச்சலப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் சுட்டுக்கொலை

அருணாச்சலப்பிரதேசத்தின் டிராப் மாவட்டத்தில் ‘நேஷனல் சோசியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகலாந்து’ (என்.எஸ்.சி.என்.) அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில், ஒரு சட்டமன்ற உறுப்பினர், அவரது மகன் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் கட்சியை சேர்ந்தவரான டிரோங் அபாஹ் (41) , அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு ஹோன்சா சட்டமன்ற தொகுதியின் தற்போதைய உறுப்பினராக உள்ளார்.

முதலில் இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறகு அந்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில காவல்துறை ஆணையர் எஸ்.பி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்திற்கு சென்றிருந்த அபாஹ், தனது தொகுதியை நோக்கி குடும்ப உறுப்பினர்கள், மூன்று காவல்துறை அதிகாரிகள் மற்றும் வாக்குப்பதிவு மைய முகவர் ஒருவருடன் காலை 11:30 மணியளவில் சென்றுக்கொண்டிருந்தபோது, என்எஸ்சிஎன் அமைப்பை சேர்ந்தவர்களாக சந்திக்கப்படுபவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று பிடிஐ செய்தி முகமையிடம் மாநில காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

“இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒரு பாதுகாப்புப்படை வீரர் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதினோரு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அருணாச்சலப்பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, தாக்குதல் நடத்திய அனைவரும் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

“இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படும். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், மேகலாயா முதல்வருமான கான்ராட் கே சங்மா, இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து அருணாச்சலப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது.

-BBC_Tamil

TAGS: