தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான 13 நபர்களுக்கு அமைதியான முறையில் நினைவஞ்சலி கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
நினைவஞ்சலி கூட்டத்தை பொது வெளியில் நடத்தவேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் முன்னர் முடிவு செய்திருந்தனர். அதற்கான ஒப்புதல் கிடைக்காததால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்து நிபந்தனைகளுடன் கூட்டத்தை நடத்த அனுமதி பெற்றனர்.
2018-ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டத்தை நடத்திய மக்கள் நூறாவது நாள் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் திரளாக வந்த பொதுமக்களை கட்டுப்படுத்தமுடியாமல், அறிவிப்பின்றி காவல்துறை கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆயிரக்கணக்கான மக்கள் சிதறி ஓடினர். 13 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.
இதன்காரணமாக, இந்த ஆண்டு பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், இறந்தவர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் பெரிய எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்காக முன்னணி வகித்துவரும் சமூக ஆர்வலர் பாத்திமா பாபு தனியார் ஹோட்டலில் நடத்திய கூட்டத்தில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
”இழந்த எங்கள் சொந்தங்களை எண்ணி, கண்ணீர் விட்டு அழுவதற்குகூட நாங்கள் அனுமதி பெறவேண்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படிதான் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளத் தயாராக இருந்தபோதும், நீதிமன்றம் ஓர் உள் அரங்கத்தில் 500 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதித்ததால், அதை பின்பற்றினோம். அமைதி வழியில் போராட்டம் நடத்திய சாதாரண மக்கள் முன் அறிவிப்பின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அந்த வலியில் இருந்து மீளவில்லை,” என்றார் பாத்திமா பாபு.
மேலும், ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு அரசு முயற்சித்தால் போராட்டம் தொடரும் என ஃபாத்திமா பாபு தெரிவித்தார்.
இறந்த 13 நபர்களில் ஒருவரான ஸ்னோலின் குடும்பத்தினர் அவருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தேவாலயத்தில் நடத்தினர். உறவினர், நண்பர்கள், ஊர் மக்கள், வெளியூரில் இருந்து வழிபாட்டுக்கு வந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டு ஜெபித்தனர்.
- ஸ்டெர்லைட்- ‘அன்பு மட்டும்தான் நிஜம்னு ஸ்னோலின் சொல்லுவா’ – நினைவஞ்சலிக்கு காவல்துறையினரை அழைத்த தாய்
- ஸ்டெர்லைட்: மே 22 தூத்துக்குடியில் நடந்தது என்ன? பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம்
ஜெபக்கூட்டத்தில் பங்குபெற்ற பலரும் ஊடகங்களிடம் பேசுவதற்கு தயங்கினர். மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த ஆண்டு துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த மாற்றும் இறந்த குடும்பங்களுக்கு உதவியதை நினைவுகூர்ந்த சஹாய தெரசா நம்மிடம் பேசுவதற்கு முன்வந்தார். ”நினைவஞ்சலி முடிந்துவிட்டது. ஆனால் தூத்துக்குடி மக்கள் ஒவ்வொருவரும் இந்த இழப்பில் இருந்து மீளவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். எந்த காரணம் சொல்லியும் இந்த ஆலை இயங்ககூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். போராட்ட எண்ணம் எல்லோருடைய மனதிலும் உள்ளது,” என்றார் சஹாய தெரசா.
-BBC_Tamil