ஊக்க மருந்து சர்ச்சை !! மறுப்புத் தெரிவித்த கோமதி மாரிமுத்து !! தகர்ந்ததா ஒலிம்பிக் கனவு ?

ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனதா என கேள்வி எழும்பியுள்ளது.

ஏப்ரல் மாதம்  தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார். திருச்சி அருகே அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமத்தைச் சேர்ந்த கோமதி கடுமையான பயிற்சிகள் மூலம் பெரும் சாதனைகளைச் செய்தார்.

இந்நிலையில், தோஹா தடகளப் போட்டியின் போது எடுக்கப்பட்ட மாதிரிகளை ஊக்கமருந்து சோதனைகளுக்கு உட்படுத்தியபோது, கோமதி மாரிமுத்து அதில் தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் கிடைக்கவில்லை என இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்லே சுமாரிவல்லா தெரிவித்துள்ளார்.  ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள கோதி மாரிமுத்து, இந்தக் குற்றச்சாட்டை நான் செய்தித்தாளில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். என் வாழ்க்கையில் நான் தடை செய்யப்பட்ட மருந்துகளை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. இதுகுறித்து தடகள சம்மேளனம் தெளிவுபடுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்,

ஊக்கமருந்துச் சோதனைக்கான ‘ஏ’ மாதிரி சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் கோமதி மாரிமுத்து, அடுத்தகட்ட சோதனைக்கு உள்ளாக்கப்படுவார் என கூறப்படுகிறது.

இதிலும், தோல்வியடையும் பட்சத்தில் 4 ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்படுவதோடு, ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும் என தெரிகிறது.

http://eelamnews.co.uk

TAGS: