சென்னை: வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என கமல்ஹாசனை மக்கள் நம்பி வாக்களித்துவிட்டனர் என சீமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என நாம் தமிழர் கட்சி களம் கண்டது. இதுபோல் மக்கள் நீதி மய்யமும் அமமுகவும் இறங்கியது. இதில் 20 இடங்களில் அமமுக 3-ஆவது இடத்தையும் 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி 3-ஆவது இடத்தையும், 12 இடங்களில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை காட்டிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. நாம் தமிழர் கட்சி மொத்தம் 40 தொகுதிகளில் 20 பெண், 20 ஆண் வேட்பாளர்களை தேர்வு செய்தது. திராவிட கட்சிகள் கூட செய்யாத எத்தனையோ புதுமைகளை சீமான் செய்துள்ளார்.
வெற்றிக் கனி
எனினும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இது குறித்து விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் பணத்தை முதலீடு செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள். மாற்று அரசியலுக்கான விதையாகத்தான் இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கிறேன். அடுத்த தேர்தலில் இதைவிட உழைத்து வெற்றிக் கனியை பறிப்போம்.
வெள்ளை
தேர்தலில் கமல்ஹாசனின் பங்களிப்பு என எதுவும் இல்லை. அவர் 50 ஆண்டுகளாக திரைப்படத் துறையில் இருக்கிறார். மக்களிடம் அனுபவம் இருக்கிறது. மேலும் அவர் வெள்ளையாக இருக்கிறார்.
போட்டி
வெள்ளையாக இருப்பவர்கள் பொய் பேச மாட்டார்கள் என மக்கள் நினைக்கின்றனர். அதனால் அவருக்கு ஓட்டு போட்டு சில தொகுதிகளில் 3-ஆவது இடம் கிடைத்துள்ளது. நாங்கள் உழைக்கும் மக்கள். எங்களை அழுக்கானவர்களாகவே பார்க்கிறார்கள். அடுத்த தேர்தலில் அவரது கட்சி போட்டியிடுமா என தெரியவில்லை, ஆனால் நான் போட்டியிடுவேன்.
117 பெண்கள்
இதேபோல் 234 தொகுதிகளிலும் 117 பெண்கள், 117 ஆண்கள் என பிரித்துக் கொடுத்து போட்டியிட வைப்பேன். அதற்கான வேலைகளில் இப்போதே இறங்குவேன். ரஜினி அரசியலுக்கு வரும் போது இதைவிட பெரிய சலசலப்புகள் இருக்கும் என்றார் சீமான்.