அரிமா போல டெல்லி செல்லும் திருமா.. மனம் நிறைய நிறைய பொறுப்புகளை சுமந்தபடி!

சென்னை: தமிழகத்தில் ஒருவரது லோக்சபாதேர்தல் வெற்றியை பலரும் சந்தோஷமாக பார்க்கின்றனர் என்றால் அது நம்ம திருமாவளவன் வெற்றிதான். உண்மையிலேயே அத்தனைபேரையும் ஆனந்தக் கண்ணீரில் இட்டுச் சென்றுள்ளது திருமாவின் எழுச்சி.

நீண்ட காலத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் செல்கிறார் திருமா. அதுவும் அவருக்குப் பிடித்த சிதம்பரம் தொகுதியிலிருந்து. விடுதலைச் சிறுத்தைகள் இந்த ஒரே தேர்தலில் பல “மாம்பழங்களை” அடித்துள்ளனர். பாமகவை காலி செய்துள்ளனர். பாமகவின் கடும் எதிர்ப்புகள், முயற்சிகளைத் தாண்டி திருமாவும் வென்றுள்ளார். விழுப்புரத்தில் ரவிக்குமாரும் வென்றுள்ளார்.

சிதம்பரம் தொகுதி நேத்து எப்படி இருந்தது தெரியுமா? சிஎஸ்கே மேட்ச் பார்ப்பது போலவே இருந்தது. டென்ஷன் ஆன ஆட்டத்தின் கடைசி நேரத்தில் தோனி அடிக்கும் சிக்ஸர் போல, முடிவு நடுராத்திரி வெளியானது. மீண்டும் நாடாளுமன்றம் செல்ல போகிறார் திருமாவளவன். அங்கு அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.

மூப்பனார்தான்

ஆரம்பத்தில் தேர்தல் அரசியலில் பங்கெடுக்க மாட்டோம் என்று அன்று விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை அறிவித்தவர்தான் திருமாவளவன்! ஆனால் கண்முன் நீண்ட பிரச்சனைகள் திசை திருப்பியது. 1990-99 காலகட்டங்களில் பஞ்சமி நில மீட்பு, இலங்கை பிரச்சனை, தலித் மக்கள் மேம்பாடு போன்ற போராட்டங்கள் இவரை உயர்த்தி காட்டியது. இன்னும் சொல்ல போனால், தேர்தல் அரசியல் நோக்கி திருமாவளவனை அழைத்து வந்ததே மூப்பனார்தான்!

தலித் மக்கள்

தன்னுடைய பெரம்பலூர் முதல் தேர்தலில் 1 லட்சம், இதே சிதம்பரத்தில் 2 லட்சம் என வாக்குகள் குவிந்ததும் அரசியல் தலைவர் ஸ்தானத்துக்கு தானாகவே உயர்ந்தார். எவ்வளவு உயர்ந்தாலும் தலித் மக்களின் உயர்வுக்கு பாடுபடுவது என்ற கொள்கையில் கொஞ்சமும் காம்பரமைஸ் செய்து கொள்ளவில்லை. அதனால்தான் 2001-ல் மங்களூர் எம்எல்ஏவாக இருந்தபோதும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய அரசியல் மதிப்பை திமுக தர மறுக்கிறது என்று வருத்தப்பட்டு எம்எல்ஏ பதவியை தூக்கி எறியவும் தயாரானார்.

பதவி ராஜினாமா

இந்த அளவுக்கு தலித் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வரும் திருமாவளவன், இப்போது 2வது முறையாக நாடாளுமன்றம் செல்ல போகிறார். 2009ல் முதல் முறையாக அவர் சிதம்பரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். சில தினங்களுக்கு முன்பு பிபிசி தமிழ் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு அவர் பதில் அளித்தபோது சொன்னதாவது:

ஆளுங்கட்சி

“நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்றால், வளர்ந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டியது அவசியம். மக்கள் மன்றத்தில் பேசும் பேச்சு, சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பேசினால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் ஏற்படும். வெற்றி பெற்ற எங்கள் உறுப்பினர்கள் மீது எந்த ஆளுங்கட்சியும் ஆதிக்கம் செலுத்த முடியாது. மக்களை அமைப்பாக்குவதுதான் என் இலக்கு. அடிதட்டு மக்களை அமைப்பாக்குவது அவ்வளவு எளிதானதல்ல” என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

டாஸ்மாக்

திருமா முன்பு இப்போது நிறைய பொறுப்புகள் உள்ளன. சிதம்பரம் மட்டும் அவரது தொகுதி கிடையாது. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாகவும் அவர் ஒலிக்க வேண்டியுள்ளது. மற்ற கட்சிகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் திருமாவுக்குக் கிடையாது. தமிழர் உரிமை, நீட் பிரச்சினை, எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட், 7 தமிழர் விடுதலை, டாஸ்மாக் அட்டூழியங்கள் என அவர் முன்பு நீண்டிருக்கும் பிரச்சினைகள் பெரியவை. அதில் எந்த அளவுக்கு திருமாவளவன் சக்தி வாய்ந்தவராக செயல்படப் போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் திருமாவின் குரல் அரிமாவுக்கு நிகராக நாடாளுமன்றத்தை உலுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

tamil.oneindia.com

TAGS: