டெல்லி: தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 9.19 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதற்கான வரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்தது.
இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.மேகதாதுவில் அணைக்கட்ட தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் ஆணையத்தின் தலைவர் மசூத்உசேன் தலைமையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தமிழக அரசு, புதுச்சேரி அரசு மற்றும் கர்நாடக அரசின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மேகதாதுவில் அணைக்கட்ட தமிழக அரசு பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 9.19 டிஎம்சி. தண்ணீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
தமிழகத்தின் குறுவை சாகுபடிக்கு தேவையான காவிரி நீரை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 9.19 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

























