போராட்டத்துல கலந்துக்க மாட்டீங்க.. அரசியலுக்கு மட்டும் வந்துடுவீங்களா? நடிகர்களை விளாசிய சீமான்!

சென்னை: நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்கம் முதலே நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். குறிப்பாக ரஜினி அரசியலுக்கு வருவதில் சீமானுக்கு சற்றும் உடன்பாடில்லை.தமிழகத்தை தமிழர்கள்தான் ஆளவேண்டும் என முழக்கமிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சீமானுக்கு பெரும் சவாலாக இருந்தது. பல இடங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் மூன்றாவது இடத்திற்கு கடுமையாக போட்டிபோட்டன.

நேர்மையாக நடைபெறவில்லை

39 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 27 இடங்களில் மக்கள் நீதி மய்யத்தை விட அதிக வாக்குகள் பெற்றது. தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என சீமான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றார்.

தமிழகத்தில்தான் அதிகம்

இந்நிலையில் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டிலேயே தமிழகத்தில்தான் திரைத்துறையினர் மீது மக்களுக்கு அதிக கவர்ச்சி உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு இல்லை.

போராட்டத்தில் பங்கேற்பதில்லை

நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள்? மக்களுக்கான போராட்டம் எதிலும் நடிகர்கள் பங்கேற்பதில்லை. ஆனால் அரசியலுக்கு மட்டும் ஏன் வருகிறார்கள்.

சீமான் விமர்சனம்

கட்சி தொடங்கிய பின்தான் கருத்து தெரிவிப்பேன் என்று கூறிய ரஜினிகாந்த் இப்போது மட்டும் மோடி வெற்றி குறித்து கருத்து கூறுகிறார்? மோடி வெற்றி பெற்றதால் மட்டும் தனித்துவமான தலைவராகிவிட முடியாது.

ஆளுங்கட்சி பதில் என்ன?

மக்களவை தேர்தல் நேர்மையாக நடைபெற்றதா என சிந்தித்து பார்க்க வேண்டும். பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக எழுந்த புகாருக்கு ஆளுங்கட்சியின் பதில் என்ன? இவ்வாறு சீமான் ஆவேசமாக பேசினார்.

tamil.oneindia.com

TAGS: