சென்னை: உலகமே நமது நாட்டு தேர்தல் முறையைப் பார்த்து காரித் துப்புகிறது. அப்படிதான் இருக்கிறது நமது லட்சணம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் ஆவேசமாக கூறியுள்ளார்.
இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது, நடந்து முடிந்த தேர்தல் முறை குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். நடத்தப்பட்ட தேர்தல் முறையானது அல்ல என்றும் எடுத்துரைத்தார்.
மேலும் வழக்கமாக ரஜினி என்றாலே காரசார கருத்தை சொல்லும் சீமான், இன்றும் அப்படியே பொரிந்து தள்ளினார். அவர் பேசியதாவது:
நானே பட்டேக்கர்
“சினிமா துறையில் உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேக்கூடாது என்று சொல்லவில்லை. திரை கவர்ச்சி ஒன்று மட்டுமே எப்படி அரசியல் தகுதியாகும்? இதுவே நானேபட்டேக்கரை எடுத்து கொள்ளுங்கள், அவர் எவ்வளவு சம்பாதிக்கிறாரோ, அதில் பாதிக்கும் மேல் மக்களுக்குதான் செலவு செய்கிறார். அதுவும் ரொம்ப காலமாகவே இப்படி உதவி வருகிறார். ஆனால் அவரே அரசியலுக்கு வரவில்லையே.
கஜா புயல்
ஆனா, ரஜினி, மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பதில்லை, எதையும் பேசுவதில்லை. அரசியலுக்கு வரும்போதுதான் கருத்து சொல்வேன்னு சொல்றார். தமிழகத்தில் பாஜக தோத்ததற்கு நீட்டும், ஸ்டெர்லைட்டும்தான் காரணம்னு கருத்து சொல்கிறார். இதை யாரு கேட்டது? கஜா புயல் சமயத்துல, ஏன் போய் மக்களை பார்க்கலைன்னு கேட்டதுக்கு, இன்னும் கட்சி ஆரம்பிக்கலைன்னு சொன்னார். அப்படின்னா, கட்சி ஆரம்பிச்சாதான், மக்கள் பிரச்சனையை பேசுவேன்னு சொன்னால் அது எப்படி?
சத்தியமா பேசுங்க
உண்மையிலேயே இந்த ஊடகத்தை பார்த்து ஒன்று கேட்கிறேன். உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்த தேர்தல் முறையாக நடந்ததுன்னு நீங்க ஒத்துக்கொள்கிறீர்களா? சத்தியமா பேசுங்கள். தேர்தல் முறைப்படி நடந்ததா? தேர்தல் ஆணையம் முறையாகத்தான் செயல்பட்டதா?
வாக்கு இயந்திர முறை
எத்தனை வலையொளியில் பார்க்கிறோம்… ஒரு பெட்டி கடை ஷட்டரை திறக்கும் போது 300 வாக்கு இயந்திரங்கள் இருக்கு. இதை உலகமே பார்த்து காரித்துப்புது. வாக்கு இயந்திரத்தை தயாரித்து கொடுக்கிற ஜப்பானே வாக்கு இயந்திர முறையை பின்பற்றவில்லை. என்னைக்கோ அதை கைவிட்டுட்டு, வாக்கு சீட்டு முறையை பின்பற்ற ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா இங்கே?
மூக்குத்தி
ஒரே ஒரு கேள்வி.. நீட் தேர்வில் நம்ம தங்கச்சியின் மூக்குத்தியை, தோடை கழட்டினாங்களே.. சின்ன மூக்குத்தியில் கூட பிட்டை கொண்டு செல்லமுடியும், காது தோட்டில் கூட பிட்டை கொண்டுசெல்ல முடியும்னு என சொன்னால், அதை என் நாடும் அதை நம்புது. ஒரு சின்ன பிட் இருந்துடுமோன்னு, தலைமுடியை கலைத்தது, துப்பட்டாவை வெட்டியதுன்னா, அவ்வளவு பெரிய வாக்கு இயந்திரத்தில் ஒரு தப்பும் நடக்காதுன்னு சொல்றதை எப்படி நம்பறது? இது எந்தமாதிரியான கட்டமைப்பு?” என கேள்விகளை அடுக்கினார்.