சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை: உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து வழக்கை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தது இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றம்.

சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை வாங்கிய விவகாரத்தில் நிறைய தவறுகள் இருப்பதை பார்க்க முடிகிறது என்று கூறிய உச்சநீதிமன்றம், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பே நிலத்தை நிறைய பேரிடம் இருந்து வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது, திட்டத்திற்கான அனுமதி கிடைக்கப் பெறுவதற்கு முன்பே எப்படி நிலத்தை வாங்கினீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளது.

சாலை திட்டத்திற்கு நிலத்தை வாங்கிய விவகாரத்தில் நிறைய தவறுகள் நிகழ்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது, சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய விஷயமாக இல்லை, விரிவான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டி இருக்கிறது என்றும் கூறி உள்ளது.

சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்ற விதித்த தடை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

ரத்து செய்த உயர்நீதிமன்றம்

விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படுத்த முனைந்த சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்து கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

அந்த சமயத்தில் பிபிசி தமிழிடம் பேசிய தமிழக அமைச்சர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ”நல்ல எண்ணத்தோடு தொடங்கப்பட்ட திட்டம் இது. சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கான பயண தூரத்தை குறைக்கும். செங்கம் போன்ற இடங்களில் தொழில்வளர்ச்சியை பெருக்கும். சேலத்தின் வளர்ச்சிக்கு ஒர் உந்துசக்தியாக இருக்கும் என்ற எண்ணத்தில் தொடங்கினோம். இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது மிகவும் வெளிப்படையாக நடந்தது” என்று கூறி இருந்தார். -BBC_Tamil

TAGS: