டெல்லி: தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை என திருத்தம் செய்யப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது.
தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கை தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் இந்தி திணிப்பு தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களுக்கு தாய் மொழி , ஆங்கிலம் மற்றும் அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட பிற இந்திய மொழிகளில் ஒன்று என மும்மொழி கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது.
கஸ்தூரி ரங்கன் குழு
மூன்றாவது மொழியாக இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் ஒன்றையும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை 3வது மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு கூறியுள்ளது.
தமிழகம்
இந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்றால் தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் இந்தி திணிக்கப்படும். இதனால் மாநில உரிமைகள் பறிபோகும் என்பது கல்வியாளர்களின் கவலையாகும்.
தொடர் எதிர்ப்பு
இதைத் தொடர்ந்து மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயல்வதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டப்பட்டன. அது போல் 3-ஆவது மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும். ஆனால் அது எந்த மொழி என்பதை மாணவர்களே தேர்வு செய்ய வேண்டுமே ஒழிய அதை கட்டாயமாக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர். மேலும் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் மிகவும் பிரபலமானது. தமிழகத்தில் இந்தி திணிக்கப்படாது என பாஜக தலைவர்களும் தெரிவித்து வந்தனர்.
இந்தி கட்டாயம்
இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி தமிழக பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீக்கம்
விருப்பத்தின் அடிப்படையில் 3-ஆவது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தி மொழி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அரசு திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.