இந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன்

சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் இருந்து பிரிவினைவாதிகளை வெளியேற்ற 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்கு மேற்கொண்டது. அந்த நடவடிக்கையின் பெயர் ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்.

சீக்கிய பிரிவினைவாதிகள் காலிஸ்தான் எனும் தனிநாடு கோரி ஆயுத போராட்டத்தை மேற்கொண்டார்கள்.  அதனை ஒடுக்க பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையை மேற்கொண்டது.

காலிஸ்தான் நாடு கோரி ஆயுதமேந்திய பிரிவினைவாதிகள் 1982ஆம் ஆண்டு ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே தலைமையில் பஞ்சாப் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்து, அங்கிருந்து இயங்கத் தொடங்கினர்.

இரண்டு ஆண்டுகளுக்குப்பின், அதாவது 1984ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி, பிந்த்ரன்வாலே தலைமையிலான ஆயுதமேந்திய பிரிவினைவாதிகளுடன் இந்திய அரசு மேற்கொண்டிருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து, ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டாரை அமல்படுத்த ராணுவத்துக்கு இந்திரா காந்தி உத்தரவிட்டார். இந்திய ராணுவத்தின் பல பிரிவுகள் இந்த ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டன. பொற்கோவிலை முழுவதுமாக சுற்றிவளைத்த ராணுவம் பின்னர் தாக்குதலை தொடுத்தது.

அந்த சமயம் என்ன நடந்தது என்பதை  பொற்கோயிலில்  இருந்த ரவீந்தர் சிங் ராபின் என்பவர் விவரிக்கிறார்.

என்ன நடந்தது?

“1984ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமிர்தசரசில் உள்ள வாய்ராம் சிங் மருத்துவமனையில் பித்தப்பை அறுவைசிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த என் அம்மா கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அவரது உடல் நிலையால் கவலையுற்ற எனது அப்பா என் அம்மாவை அமிர்தசரசில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தரன் தாரன் கிராமத்தில் இருக்கும் என் அம்மாவின் உறவினர் ஒருவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்: காலிஸ்தான் தனி நாட்டிற்கான போராட்டம் - நடந்தது என்ன?

நானும் என் சகோதரிகளும் ராஜஸ்தானில் உள்ள எங்கள் பூர்வீக இடமான ஸ்ரீ கங்கா நகரில் இருந்து அமிர்தசரசுக்கு கிளம்பினோம். அங்கிருந்து எங்கள் ஊர் 300 கிலோ மீட்டர் தூரம் இருந்தது.

1984ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று பொற்கோயில் வளாகத்தில் உள்ள சீக்கிய நூலகத்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஆயுதம் ஏந்திய சீக்கியர்களால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அரண்களை நான் காண நேர்ந்தது. அந்த தடுப்பு அரண்களை அமைக்க அங்கு தொண்டூழியம் செய்துகொண்டிருந்த பக்தர்கள் உதவி செய்துகொண்டு இருந்தனர்.

அந்நாட்களில் பொற்கோயிலில் காலணிகளை பாதுகாப்பதற்கான இடம் இல்லை. சேவகர்கள்தான் காலணிகளை பாதுகாப்பார்கள். பொற்கோயிலில் மரியாதை செலுத்திவிட்டு லட்சுமணசர் சௌக் பகுதியில் இருந்த உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றோம்.

சுற்றுச் சுவரை நாங்கள் நெருங்கியபோது துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அங்கிருந்த திண்ணைகளில் மக்கள் தஞ்சம் அடையத் தொடங்கினர்.

கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த எங்களை நோக்கி வந்த பொற்கோயிலின் பின்னால் குடியிருக்கும் எங்கள் தந்தையின் நண்பர் கஜன் சிங் வந்தார். அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் மூலம் அங்கு நிலைமை நன்றாக இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

அங்கிருந்த கடைக்காரர்கள் கடைகளை அடைக்கத் தொடங்கினர். ஊரடங்கு உத்தரவு அமலாவதை அப்போதுதான் நான் முதல் முறை பார்த்தேன்.

இரவு உணவுக்குப் பின் பொற்கோயிலில் சேவை செய்ய செல்லுமாறு கஜன் சிங் என் அப்பாவிடம் சொன்னார். அவருடன் நானும் சென்றேன்.

ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்: காலிஸ்தான் தனி நாட்டிற்கான போராட்டம் - நடந்தது என்ன?

நள்ளிரவு 12 மணியளவில் கஜன் சிங் மற்றும் என் அப்பாவுடன் நான் தரையைக் கழுவிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு பாய்ந்து வந்த புல்லட் அங்கிருந்த விளக்கைத் தாக்கியது. அங்கு இருள் சூழ்ந்தது.

எனக்கு பயம் உண்டானது. இரண்டு சேவகர்கள் வந்து எங்களை நுழைவாயில் அருகே அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் தொடங்கிய எங்கள் தொண்டூழியம் அரை மணி நேரம் தொடர்ந்தது. பின்னர் 2 மணிக்கு நாங்கள் கஜன் சிங் வீட்டுக்குச் சென்றோம்.

அப்போது ஜூன் 2 ஆகியிருந்தது. இப்போதுவரை பஞ்சாபின் பல்வேறு இடங்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதும், பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதும் எங்களுக்குத் தெரியாது.

அன்றைய பகல் பொழுதில் ராணுவம் மற்றும் ஆயுதம் ஏந்திய சீக்கிய இளைஞர்கள் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. ராணுவத்தினர் வரும் தெருக்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டும் என்று அந்த இளைஞர்கள் கூறியிருந்ததால் தங்கள் கடைகள் முன்னாள் இருந்த கூடாரங்களை கடைக்காரர்கள் அகற்றிக்கொண்டிருந்தனர்.

அன்று மீண்டும் பொற்கோயில் சென்றபோது அங்கு கங்காநகரை சேர்ந்த மொஹிந்தர் சிங் கபாரியாவைச் சந்தித்தோம். அவர் கையில் 303 ரைபில் ஒன்றை வைத்திருந்தார். பஞ்சாபில் சூழ்நிலை சரியில்லை என்றும் ராஜஸ்தானில் உள்ள எங்கள் பூர்வீக வீட்டுக்கே குடும்பத்தினரை திரும்ப அழைத்துச் செல்லுமாறும் அவர் என் அப்பாவிடம் கூறினார்.

அவரிடம் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே குறித்து என் அப்பா கேட்டார். அவர் ஆயுதம் ஏந்தும் இளைஞர்களை மட்டுமே சந்திப்பார் என்று அதற்கு மொஹிந்தர் பதிலளித்தார்.

ஒரு ரிசர்வ் போலீஸ் அதிகாரியிடம் சென்ற என் தந்தை பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அனுமதிக்குமாறு சொன்னார். ஆனால் ராணுவம்தான் முடிவெடுக்கும் என்று அந்த அதிகாரி கூறிவிட்டார்.

ஜூன் 3 அன்று பொற்கோயிலை ராணுவம்  தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. சீக்கிய இளைஞர்களுடனான மோதல் தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது.”

  • இவ்வாறாக விவரிக்கிறார் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ரவீந்தர் சிங் ராபின்

ஜூன் 3 ஆம் தேதி தொடங்கிய தாக்குதல் 5 நாட்கள் கழித்து 8ஆம் தேதிக்கு முடிவுக்கு வந்தது.

இந்த ராணுவ நடவடிக்கையில் பிந்த்ரன்வாலே ஜூன் 6ம் தேதி பலியானார்.

அரசு என்ன சொல்கிறது?

இந்த தாக்குதலில் 87 ராணுவ வீரர்கள் உட்பட 400 பேர் இறந்ததாக இந்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால், சீக்கியர்கள் இதனை மறுக்கின்றனர்.  சீக்கிய மதத்தின் ஐந்தாம் குருவான குரு அர்ஜன் சீக்கின் நினைவுநாளுக்காக வந்திருந்த பக்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலில் பொற்கோயிலின் சில பகுதிகளும் சேதமானது.

சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி

பொற்கோயில் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் தங்கள் மீதான தாக்குதல் என சீக்கியர்கள் கருதினார்கள். `

சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி

இந்த ப்ளூ ஸ்டார் ஆப்ரேஷனுக்கு உத்தரவிட்ட அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களான பியந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங்கால் 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கொல்லப்பட்டார்.

துப்பாக்கியால் சுட்ட பின் பியந்த் சிங்கும், சத்வந்த் சிங்கும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டனர். “நாங்கள் செய்ய வேண்டியதை செய்துவிட்டோம், இனி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்,” என்றார் பியந்த் சிங்.

இப்படித்தான், சீக்கியர்களின் பொற்கோவிலில் இந்திரா காந்தி பிரதமராக எடுத்த ‘ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கைக்கு பழிவாங்கினார்கள் சத்வந்த் சிங்கும் பியந்த் சிங்கும்.

பிரார் மீதான தாக்குதல்

பழிவாங்குதல் அத்தியாயம் இத்துடன் முடியவில்லை.

இந்திய இராணுவத் தளபதியான கே.எஸ்.பிரார்

ஆபரேஷன் ப்ளூஸ்டார் நவடிக்கைக்கு தலைமையேற்றிருந்த ஓய்வு பெற்ற இந்திய இராணுவத் தளபதியான கே.எஸ்.பிரார் 2012ம் ஆண்டு லண்டனில் தாக்கப்பட்டார்.

பிராரும் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர். 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போது 78 வயதாகி இருந்த பிராரை சிலர் தாக்கினர்.

இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின் போது, இணைய காணொளி மூலம் சாட்சி அளித்த லெப் ஜெனரல் பிரார், பொற்கோயிலில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கை சீக்கிய சமூகத்துக்கு எதிரானது அல்ல, கோயிலில் இருந்து கொலைகளை செய்யும் பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்றார்.

ஜெனரல் பிராரைத் தாக்கிய மன்தீப் சிங் சாந்துவும், தில்பாக் சிங்கும் பொற்கோயில் மீதான ராணுவ நடவடிக்கையின்போது குழந்தைகளாக இருந்தனர்.

பிரிட்டன் தொடர்பு

இந்த ப்ளூஸ்டார் நடவடிக்கைக்கு பிரிட்டனின் ஆலோசனை இருந்தது என்பது போல 2014ம் ஆண்டு தகவல்கள் வெளியாகின. இது குறித்து பிரிட்டன் அரசாங்கமும் ஓர் ஆலோசனையை நடத்தியது.

பொற்கோவில் மீதான இராணுவத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தியா சென்ற பிரிட்டன் ஆலோசகர், தாக்குதல் நடவடிக்கை என்பது கடைசி நடவடிக்கையாகவே இருக்க வேண்டும் என்றும், அதுவும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார் என 2014ம் ஆண்டு பிரிட்டன் வெளியுறவு அமைச்சராக இருந்த வில்லியம் ஹேக் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும் அந்த நடவடிக்கைக்கு எந்த உபகரணங்களோ அல்லது பயிற்சியோ பிரிட்டன் வழங்கவில்லை என்றும் வில்லியம் ஹேக் அப்போது கூறினார்.

ஆனால் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு தலைமையேற்றிருந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவத் தளபதியான கே.எஸ்.பிரார் தனக்கு எந்த ஆலோசனையும் கிடைக்கப்பெறவில்லை என்று பிபிசியிடம் கூறினார். -BBC_Tamil

TAGS: