ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி கிட்னி வாங்குவதாக கூறி சுமார் 500 பேரிடம் பல கோடி மோசடி செய்திருப்பதாக ஈரோடு போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு சம்பத் நகரில் கல்யாணி கிட்னி கேர் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி சார்பில் ‘பேஸ்புக்’ (முகநூலில்) ஒரு கவர்ச்சிகரமான போலி விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
அதில், கிட்னி கொடுப்பவர்கள் இந்த முகவரியில் முன் பதிவு செய்ய வேண்டும். தேவைப்படும்போது கிட்னி கொடுத்தால் ஒரு கிட்னிக்கு 3 கோடி ரூபாய் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
கிட்னி கொடுக்க முன்பதிவு பணம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்ட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு கிட்னிக்கு 3 கோடி ரூபாய் என்ற அறிவிப்பால் ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, கரூர் உள்பட தமிழகம் மட்டும் அல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பேர் இந்த போலி முகவரி உள்ள கும்பலை சேர்ந்தவர்களுக்கு முன் பணம் கட்டி உள்ளனர்.
இந்த முன் பணமே கோடிக்கணக்கில் சேர்ந்திருக்கும் என தெரிகிறது. தனியார் ஆஸ்பத்திரி பெயரில் முகநூல் தொடங்கி இந்த பண வசூல் வேட்டை நடத்திய கும்பல் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த கும்பல் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த பகுதியில் உள்ள முக்கியமான ‘கிட்னி’ ஆஸ்பத்திரி பெயரில் போலி பேஸ்புக் மூலம் அறிவிப்பை வெளியிட்டு சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களிடம் கிட்னி கொடுக்க முன் பணம் வசூலித்து இருப்பதாகவும் ஈரோடு போலீசார் தெரிவித்தனர்.
இப்படி பணம் கொடுத்த ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் ஈரோட்டில் உள்ள தனியார் ‘கிட்னி’ ஆஸ்பத்திரிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பிறகே அவர்களுக்கு தங்கள் ஆஸ்பத்திரி பெயரில் போலி முகநூல் வெளியிட்டு பல கோடி பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையொட்டி தனியார் ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் தெரிவித்தார்.
போலீஸ் சூப்பிரண்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளார்.
மேலும் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த கிட்னி மோசடி விவகாரத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் கிட்னி கொடுக்க பதிவு செய்து முன் பணம் கொடுத்து ஏமாந்து உள்ளார்களா? என்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ‘கிட்னி’ மோசடி குறித்து புகார் கொடுத்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி பெயரில் போலி முகநூல் மூலம் ‘கிட்னி’ வாங்குவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் ஆஸ்பத்திரி பெயரில் கிட்னி வாங்குவதாக கூறி பல கோடி மோசடி செய்துள்ள கும்பல் பல இடங்களில் செயல்பட்டு வந்துள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இவர்களுக்கெல்லாம் தலைமை மோசடி கும்பல் ஆந்திர மாநிலம் ஐதராபத் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இதனால் ஈரோடு மாவட்ட போலீசார் ஐதராபாத் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
-athirvu.in