எல்லாவற்றிலும் சண்டைபோடும் திமுக- அதிமுக.. இந்த ஒரு விஷயத்தில் ஒற்றுமையாக இருப்பது ஏன்?

சென்னை: எல்லாவற்றிலும் சண்டைபோட்டுக்கொள்ளும் திமுக அதிமுக.. இந்தி எதிர்ப்பில் மட்டும் ஒன்றுபடுவது ஏன்? தமிழை காப்பாற்றுவதற்காகவா அல்லது தேசிய கட்சிகள் அரசியல் செய்வது தமிழகத்தில் எளிதாகிவிடும் என்று பயப்படுவதான் காரணமா என்ற கேள்வி எழுகிறது.

1938 மற்றும் 1965இல் இந்தி எதிர்ப்பு என்பது, உணர்வு பூர்வமான பிரச்னையாக இருந்தது. அந்நிய மொழியான இந்தியை நாங்கள் ஏன் கற்க வேண்டும் என மொத்தமாக கிளர்ந்து எழுந்து தன்னெழுச்சியமாக மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் 1965இல் இந்தி பேசதா மாநிலங்களில் இந்தி கட்டாயம் இல்லை என்று நேரு வாக்குறுதி அளித்தார். அதன்பிறகு இப்போது வரை தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படுகிறது. ஆனால் அதேநேரம் மற்ற மாநிலங்கள் இந்தியை விருப்பபாடமாக ஏற்றுக்கொண்டதால், அங்கெல்லாம் மும்மொழிக்கொள்கை உள்ளது.

மும்மொழி கொள்கை

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு புதிய வரைவு கல்வி கொள்கையை வெளியிட்டது. இதன்படி இந்தி பேசாத மாநிலங்களிலும் கட்டாயம் இந்தி கற்பிக்கப்பட வேண்டும். மும்மொழி கல்வி கொள்கை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டது.

இந்திக்கு கடும் எதிர்ப்பு

இந்நிலையில் எல்லாவற்றிலும் அடித்துக் கொள்ளும் திமுக மற்றும் அதிமுக இந்த விஷயத்தில் ஒற்றுமையாக மத்திய அரசை எதிர்த்து கடுமையாக எச்சரிக்கையை விடுத்தன. இந்தியை திணித்தால் போராட்டம் வெடிக்கும் என திமுக கடுமையாக எச்சரித்தது.

இருமொழிக் கொள்கை

இதேபோல் அதிமுக தமிழகத்தில் இந்தியை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும்.இரு மொழிக்கொள்கை தான் தமிழகத்தின் கொள்கை என்றும் அதில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.மேலும் இந்தி திணிப்பினை அதிமுக கடுமையாக எதிர்த்துள்ளது.

சண்டை போடும் அதிமுக-திமுக

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைகளில் முரண்பட்டு தனித்தனியாக செயல்படும் திமுக மற்றும் அதிமுக எதிர்க்கட்சிகள் இந்தி திணிப்பில் மட்டும் ஒற்றுமையாக உள்ளார்கள். ஏனெனில் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், கூடங்குளம் அணுமின்நிலையம், காவிரி நீர் விவகாரம் உள்ளிட்டவைகளில் இவ்வளவு ஆக்ரோஷத்தோடு ஆளும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து நிற்கவில்லை. இந்தி திணிப்புக்கு வலிமையான எதிர்ப்பை பதிவு செய்த கட்சிகள் மற்ற விஷயங்களில் இவ்வளவு ஒற்றுமையாக வலிமையாக செயல்படாதது ஏன் என்று கேள்வி எழாமல் இல்லை.

அதிமுக-திமுக உறுதி

ஏனெனில் இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் சொன்னது போல் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா சக்திகள் மற்றும் தேசிய கட்சிகள் வேர் ஊன்றிவிடும் என்ற பயமே காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழை காப்பாற்றுவது ஒருபுறம் எனில், தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் விடக்கூடாது என்பதில் திமுக அதிமுக கட்சிகள் உறுதியாக இருப்பதை தெளிவாக தெரிகிறது.

மும்மொழி கட்டாயம்

இந்த விஷயம் மத்தியில் ஆளும் பாஜக அரசு புரியாமலும் இல்லை. எனினும் இதனையும் மீறி மறைமுகமாக ஒன்றை பாஜக அரசு தமிழகத்தில் ஒன்றை செய்துள்ளது. அதுதான் மும்மொழி கொள்கை. இனி மத்திய அரசின் கல்வி குறித்த திருத்திய வரைவு கொள்கை அமலுக்கு வந்தால் மும்மொழி என்பது தமிழகத்திலும் கட்டாயம் ஆகிவிடும். அதன்பிறகு இந்தி என்று இல்லை ஏதேனும் ஒரு மொழியை கட்டாயம் விருப்பப்படாமாக கூடுதலாக மக்கள் படிக்கத்தான் வேண்டும். அப்போது தானாகவே இந்தியை மக்கள் விருப்பபாடமாக கற்பார்கள் என்று மத்திய அரசு நம்பிக்கையில் உள்ளது.

tamil.oneindia.com

TAGS: