தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகத்தில் முடங்கிய கட்டுமான துறை.. 50 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

சென்னை: தமிழகத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, கட்டுமான தொழில் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மணல் தட்டுப்பாடு, ஜிஎஸ்டி வரி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக கட்டுமான தொழில் ஏற்கனவே தடுமாற்றத்தில் உள்ளது.

தமிழகத்தில் குடிநீர் மற்றும் அடிப்படை தேவைகளுக்கே தண்ணீர் இல்லாமல் மக்கள் பெருந்துயரத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.இந்நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, கட்டுமானத் தொழில் பெரும்பாலும் முடங்கிவிட்டது. இதனால் கட்டுமான தொழிலை நம்பியுள்ள 50 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் கட்டிடம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமான பணிகளின் வேகம் தண்ணீரின்றி குறைந்துள்ளது. மாநிலம் முழுவதுமே தண்ணீர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கட்டுமான தொழிலாளர்கள் செய்வதறியாது உள்ளனர்.

பல பகுதிகளில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் தங்களது அன்றாட வாழ்விற்கே பணம் ஈட்ட முடியாமல் அல்லாடுகின்றனர். அதே போல வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி, கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள கட்டுமான உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள, கட்டுமானத்துறை மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மணல் தட்டுப்பாட்டில் துவங்கி சிமெண்ட் விலையேற்றம், கம்பிகள் விலையேற்றம் போன்ற மூலப்பொருட்களின் விலையேற்றத்தினாலும், அப்ரூவுட் லே அவுட்டை முறைப்படுத்துதலில் ஏற்பட்ட காலதாமதத்தினாலும் தமிழகத்தில் கட்டுமானத்துறை மிகவும் சீரழிந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, கட்டுமானத்துறை முற்றிலும் முடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். கடந்த மூன்று வருடங்களையும் சேர்த்து கட்டுமானத்துறையில் ரூ.10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்களையும் தெரிவித்துள்ளனர்.

தற்போது முடங்கியுள்ள கட்டுமானத்துறையை நம்பி வாழும் 50 லட்சம் தொழிலாளர்கள், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இவர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. மழை காலத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ள 3 மாதங்களுக்கு, நிவாரணம் வழங்குவதை போல, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிதி வழங்கவும் கோரப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 28 லட்சம் தொழிலாளர் குடும்பத்தினருக்காவது, மாதந்தோறும் ரூ.5,000 நிவாரணம் நிதியாக வழங்கினால் மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த நிவாரண நிதியை நலவாரிய பணத்திலிருந்து வழங்க வேண்டும் என்று கேட்கிறோம்.

ஏனெனில் நலவாரியத்தில் ஏற்கனவே ரூ.2,200 கோடி செஸ் நிதியாக வசூலிக்கப்பட்டு உள்ளது என கட்டுமான உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: