பாக்., மக்களுக்கு தண்ணீர் தந்த இந்தியர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வறுமையிலும், வறட்சியிலும் வாடும் மக்கள் வசிக்கும் பகுதியில் 600க்கும் மேற்பட்ட அடி குழாய்களை அமைத்து, அப்பகுதி மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்துள்ளார் இந்திய வம்சாவளி தொழிலதிபரான ஜோஜிந்தர் சிங் சலாரியா.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரான சலாரியா, 1993 ம் ஆண்டு துபாயில் குடியேறி, போக்குவரத்து வாகன தொழிலை நடத்தி வருகிறார். பேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பாக்.,ன் தென்கிழக்கு பகுதியான தர்பார்கர் மாவட்டத்தில் தண்ணீரின்றி மக்கள் மிகவும் வறுமையில் வாடுவதை அறிந்தார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களின் உதவியுடன், 600 க்கும் மேற்பட்ட அடி பம்பு குழாய்களை அமைத்து கொடுத்துள்ளார். மேலும் அப்பகுதி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

இது குறித்து சலாரியா கூறுகையில், புல்வாமா சம்பவத்திற்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. கடுமையான வறட்சியில் பாதிக்கப்பட்ட இப்பகுதி கிராம மக்களுக்கு தண்ணீர் பம்புகள் அமைத்து கொடுத்துள்ளோம். சாலை வசதியோ, மருத்துவமனை வசதியோ இல்லாத கிராமங்கள் இவை.

பிரதான சாலையை அடைய இவர்கள் 25 கி.மீ., வரை நடந்து செல்ல வேண்டி உள்ளது. பள்ளிகளும் மிக மோசமான நிலையிலேயே உள்ளன. பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வாய்ப்பு இல்லை. இங்குள்ளவர்களில் 87 சதவீதம் மக்கள் வறுமையில் வசிப்பவர்கள் என்றார்.

-dinamalar.com

TAGS: