24 மணி நேரம் கடைகள் இயங்க உத்தரவு: தொழிலாளர்களுக்கு வரமா சாபமா?

தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதை அடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அரசாணைக்கு முன்னர், கடைகள் பெரும்பாலும் இரவு 11 மணிவரை மட்டுமே இயங்கமுடியும் என்ற கட்டுப்பாடு இருந்ததால், சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட்டன.

மத்திய அரசின் தொழில்துறை அமைச்சகம் நாடு முழுவதும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும் வணிக நிறுவனங்கள் 365 நாட்கள், 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என்ற விதியை பரிந்துரை செய்து, சட்ட முன்வடிவு வரைவு திட்டத்தை 2016ல் அனுப்பியது. மத்திய அரசின் வரைவு திட்டத்தை பரிசீலித்த தமிழக அரசு இந்த விதிமுறையை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பின்பற்ற அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி, 10 ஊழியர்களுக்கும் அதிகமானவர்கள் பணிபுரியும் வணிக நிறுவனங்கள் 365 நாட்கள், 24 மணி நேரம் செயல்படலாம். பெண் ஊழியர்கள் 8 மணிக்கு மேல் பணியில் இருக்கக்கூடாது, பெண்கள் இரவு பணியில் இருக்க அவர்களின் ஒப்புதலை பெறவேண்டும் என்றும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாக விடுப்பு கொடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடைகள் 24 மணி நேரம் இயங்க இசைவு

புதிய அரசாணையைப் பற்றி வெளிப்படையாகப் பேச பல தொழிலாளர்கள் முன்வரவில்லை. பெயர் குறிப்பிட விரும்பாத சென்னையை சேர்ந்த இளம் ஊழியர் ஒருவர், ”நான் சூப்பர்மார்கெட்டில் பணிபுரிகிறேன். தற்போது எட்டு மணி நேரம் வேலை என்றாலும், மதியம் ஒரு மணிக்கு தொடங்கி, இரவு 11 மணிக்குதான் என்னை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இரவு ஷிப்ட் வேலை கட்டாயம் என்று சொல்லிவிட்டால், எனக்கு ஒய்வு கிடைப்பது சிரமம்தான். என் உடல் நலனும் மோசமாகும். இரவு நேரம் பணிபுரியும் ஊழியர்களின் ஆரோக்கியத்தில் நிறுவனங்கள் அக்கறை காட்ட வேண்டும் என அரசு விதிகளை கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும்,”என்றார்.

தனியார் கல்லூரி மாணவர் சந்தோஷ், இரவு நேர வேலை தனக்கு வேலைவாய்ப்பையும், அதன் மூலம் தன் படிப்பிற்கான பணத்தை தரும் என்று நம்புகிறார்.

”இரவு ஷிப்ட் வேலைக்கு சென்றுவிட்டு, அந்த சம்பளத்தில் கல்லூரி கட்டணத்தை செலுத்தலாம். தற்போது ஒரு கடையில் பகல் நேரத்தில் காலை ஷிப்ட் கல்லூரியில் படிக்கிறேன். இரவு வேலை கிடைத்தால் எனக்கு உதவியாக இருக்கும்,”என்கிறார் சந்தோஷ்.

வணிக நிறுவனங்களிடம் பாதுகாப்பு வசதிகள் இருப்பதை அரசுக்கு தெரிவித்தபின்னரே, கடைகள் இயங்க வேண்டும் என தமிழக அரசு ஒரு விதியை இந்த அரசாணையில் சேர்த்திருக்கலாம் என்கிறார் பெண்ணிய செயல்பாட்டாளர் கே.ஆர்.ரேணுகா.

கடைகள் 24 மணி நேரம் இயங்க இசைவு

”இரவு நேரத்தில் பெண்கள் வேலை செய்ய, அவர்களின் விருப்பத்தை எழுத்துப்பூர்வமாகப் பெற்ற பின்னர், கடைகளில் அவர்கள் பணி செய்ய அனுமதிக்கலாம் என்று புதிய அரசாணை கூறுகிறது. பெண் ஊழியர்களின் போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்காக என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை வணிக நிறுவனங்கள் தெரிவித்துவிட்டு, பின்னர் கடைகளை நடத்தினால், அந்த ஊழியர்கள் அச்சமின்றி பணி செய்வார்கள். பல கடைகளில் இரவு நேரப் பணியை ஒத்துக்கொண்டால்தான், வேலையில் வைத்துக்கொள்வோம் என வாய்மொழி கட்டுப்பாடு விதித்தால், அதனை ஏற்க பெண்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள்,”என்கிறார் ரேணுகா.

மேலும், காவல்துறையின் பாதுகாப்பு குறித்தும் ஊழியர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்கிறார் அவர். ”தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எந்த அளவில் சிரத்தையுடன் விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்துத்தான் இந்த அரசாணை பயனுள்ளதா என்று தெரியவரும். வேலைவாய்ப்பை அதிகரிக்க, சுயதொழில் செய்வோருக்கு எளிதில் கடன் கொடுப்பது, தொழில் முனைவோர் பயிற்சிகள் அளிப்பது போன்றவை இந்த புதிய 24 மணி நேர ஒப்புதலைவிட பயனளிக்கும்,”என்பது அவரது கருத்து.

ஓய்வு பெற்ற பொருளியல் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவிடம் இந்த புதிய அரசாணை வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து கேட்டோம்.

”8 மணி நேரம் மட்டுமே ஒரு தொழிலாளிக்கு வேலை கொடுக்கவேண்டும், ஆனால் வேலை நேரத்தை தாண்டி அதிகபட்சமாக இரண்டரை மணிநேரம் வேலையில் ஈடுபடும் சூழலில், ஒரு வாரத்தில் 57 மணி நேரம் மட்டுமே வேலைவாங்க வேண்டும் என்கிறது அரசாணை. இந்த அறிவிப்பு எட்டு மணி நேர வேலை என்பதற்கு முரணாக உள்ளது. இந்த அரசாணையில் உள்ள விதிகள் பெரும்பாலும் முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளதாக தோன்றுகிறது. தமிழக அரசாங்கம் இதில் தொழிலாளியின் நலனுக்காக விதிகளை சேர்த்திருக்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உறுதி, ஊழியர்களை மூன்று ஷிப்ட் முறையில் மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று கூறியிருந்தால், இது மேலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று நம்பலாம்,”என்கிறார் வெங்கடேஷ் ஆத்ரேயா.

கடைகள் 24 மணி நேரம் இயங்க இசைவு

தமிழக அரசின் இந்த அரசாணை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டும் தொழிற்சங்கவாதி ஆ.சௌந்தராராஜன், குறைந்தது மூன்று மாதங்கள் இந்த விதிகள் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதை கண்காணிப்பது அவசியம் என்கிறார்.

”இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆராய்வோம். எல்லா வணிக நிறுவனங்களிலும் தொழிற்சங்கம் இருக்கவேண்டும் என ஒரு விதியை அரசாங்கம் கொண்டு வந்திருக்கலாம். பல ஐடி நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் பிற வணிக நிறுவனங்களில் உள்ள ஊழியர்களின் நிலையை நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். பல கடைகளில் ஊழியர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் கூட கொடுக்கப்படுவதில்லை,” என்கிறார் சௌந்தராராஜன்.

தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் சௌந்தரராஜன், ”பணியாளர்களுக்கு தேவையான ஓய்வறைகள் இருப்பதை அரசு உறுதிசெய்யவேண்டும். பாலியல் தொல்லைகளை தெரிவிக்க குழு செயல்படுகிறதா என்றும் கவனிக்க வேண்டும்,”என்கிறார். -BBC_Tamil

TAGS: