தமிழகத்தில் 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா காண்பிக்கலாம்.. தமிழக அரசு அதிரடி அனுமதி!

சென்னை: தமிழகத்தில், 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா படங்களை திரையிட்டுகொள்வதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்களை திறந்து வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு 28ம் தேதி அரசாணை வெளியிட்டது. அது தற்போது அரசிதழிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் திரையரங்குகளை 24 மணி நேரம் திறந்து கொள்ளவும் அந்த உத்தரவில் அம்சம் இடம் பெற்றுள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர் சுனில் பாலிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மல்டிபிளக்ஸ், மால் அல்லது சிறு திரையரங்குகள் என தனித்தனி பாகுபாடுகள் இதில், கிடையாது.. அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகளுக்கும் ஒரே சீராக இந்த உத்தரவு பொருந்தும்.

சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் பகுதிகளில் திறந்து கடைகளை மூடுவதற்கான உத்தரவை காவல்துறை பிறப்பிக்க முடியும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் கூறுகையில், இது வரவேற்கத்தக்க ஒரு அறிவிப்பு. பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் வசூல் பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே திரையிடும், நேரத்தை அதிகரித்துள்ளதன் காரணமாக, டிக்கெட்டுகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவது, போன்றவையும் குறையும், தயாரிப்பாளர்களுக்கும் அதிக வசூல் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: