இன்னும் 3 வாரம்தான்.. மாயமான முகிலன் பற்றி முழு தகவலும் வெளியே வரப்போகிறது!

சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனது, தொடர்பான விவரங்களை சீலிட்ட உரையில் வைத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீஸ் சமர்ப்பித்துள்ளது.

முகிலன் வழக்கு தொடர்பாக முக்கியமான துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி கூறியுள்ள நிலையில், சீலிட்ட உரையில், என்ன இருக்கிறது என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி சமூக ஆர்வலர் முகிலன் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார். இதையடுத்து மதுரை செல்வதாக கூறிவிட்டு, எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றார். ஆனால், அவர் மதுரை வந்தடையவேயில்லை. ரயிலில் வைத்தே மாயமானதாக கூறப்படுகிறது.

ஆட்கொணர்வு மனு

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முகிலன் காணாமல் போன விவகாரத்தில் மனித உரிமை ஆர்வலர், ஹென்றி டிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை கடந்த மார்ச் 4-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

சீலிட்ட உரை

அப்போது, உயர்நீதிமன்றத்தில் முகிலன் தரப்பில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆஜரானார். அப்போது சிபிசிஐடி போலீசார் ஒரு சீலிட்ட கவரை நீதிபதியிடம் கொடுத்து முகிலன் சம்பந்தமாக முக்கியமான தகவல்கள் இதில் உள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து, முகிலன் தொடர்பான வழக்கை நான்கு வாரத்திற்கு தள்ளி வைப்பதாக கூறியது.

3 வாரங்கள்

ஆனால், முகிலன் தரப்பிலோ, இன்னும் இரண்டு வாரத்திற்கு மட்டும் வழக்கை தள்ளி வைத்து முகிலனை ஆஜர்படுத்த வேண்டும் என கூறினார்கள். ஆனால் சிபிசிஐடி தரப்பு மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்டது. இதையடுத்து, வழக்கை மூன்று வாரங்கள் தள்ளி வைத்தது நீதிமன்றம்.

இறுதி எச்சரிக்கை

மேலும், முகிலன் விவகாரத்தில் வாய்தா கேட்பது இதுதான் இறுதிமுறை என சிபிசிஐடியை எச்சரித்தது ஹைகோர்ட். எனவே அடுத்த விசாரணையின்போது முகிலன் சம்பந்தமான பிரச்சினை குறித்து முழு விவரங்களை சிபிசிஐடி தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

tamil.oneindia.com

TAGS: