ரயிலில் சென்ற முதியவர்கள் வெயில் தாங்காமல் உயிரிழப்பு

கோவையை சேர்ந்த முதியவர்கள் நான்கு பேர் ரயிலில் பயணித்த போது வெயில் தாங்காமல் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.

டெல்லி – திருவனந்தபுரம் இடையே ஓடும் கேரளா விரைவு வண்டியில், வாராணாசி மற்றும் ஆக்ரா போன்ற இடங்களுக்கு சுற்றுலா வந்த 65 பேர் பயணித்துள்ளனர். அதில் 80 வயதான பச்சையா, 67 வயதான பாலகிருஷ்ணா, 74 வயதான தனலட்சுமி, மற்றும் 87 வயதான சுப்பையா ஆகியோரும் பயணித்துள்ளனர்.

ஆக்ராவில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி பயணித்த பொழுது, நேற்று (10.06.2019) மாலை ஜான்சி என்னும் ரயில் நிலையத்தில் இவர்களில் மூன்று பேர் மரணமடைந்து உள்ளனர். அதில் கவலைக்கிடமாக இருந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் உயிரிழந்துள்ளார்.

நால்வரும் வெயில் தாங்காமல் மரணித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜான்சி ரயில் நிலையத்தின் கோட்ட மேலாளர் நீரஜ் அம்பாஸ்தா, “டெல்லியில் இருந்து வந்த கேரளா விரைவு வண்டி ஜான்சி ரயில் நிலையத்தினை அடைந்த பொழுது, மூன்று நபர்கள் இறந்து இருந்தனர், ஒருவர் கவலைக்கிடமாக இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு அவரும் இறந்து விட்டார். நான்கு நபர்களின் உடல்களும் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ரயிலில் சென்ற முதியவர்கள் வெயில் தாங்காமல் உயிரிழப்பு

உடற்கூறாய்வு சோதனையில் இயற்கை மரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 பேர் கொண்ட குழுவினர் ஆக்ரா காண்ட் ரயில் நிலையத்தில் ஏறியுள்ளனர், ஜான்சிக்கு அருகில் வரும் பொழுது உடலில் அசௌகரியம் ஏற்பட்டதாக கூறியதாக அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர். மரணித்தவர்களின் உடல்கள் இன்று மாலை 6 மணிக்கு ஜான்சி ரயில் நிலையத்தில், கேரளா விரைவு வண்டியில் ஏற்றி கோயம்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும். வெயில் தாங்காமல் இறந்து விட்டார்கள் என்று உறுதியாக கூற இயலாது, நான்கு பேருமே வயது முதிர்ந்தவர்கள். வெப்பம் காரணமாக மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என கருதப்படுகிறது” என்று கூறினார்.

`வெயில் கொடுமை`

மத்திய மற்றும் வட இந்தியா, அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய இடங்களில் வெப்பநிலை 45 டிகிரியை தாண்டியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு என்ற நகரத்தில் வெயில், 50.8 டிகிரி செல்சியஸை தொட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அது மட்டுமல்லாது பல இடங்களில் கடுமையான அனல் காற்று வீசுகிறது. பல இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil

TAGS: