இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு? – கோவையில் ஏழு இடங்களில் சோதனை, ஒருவர் கைது

கோவையில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர், அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இங்குள்ள சில நபர்கள் இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியோடு தொடர்பில் இருந்துள்ளனர் எனவும், தமிழகம் ,கேரளாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்த திட்டங்கள் இருப்பதாகவும் புலனாய்வுத் துறை விசாரணையில் தெரிய வந்ததால் இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளது.

உக்கடத்தை சேர்ந்த முகமது அசாருதீன், சேக் இதயத்துல்லா, இப்ராகிம், போத்தனூரை சேர்ந்த அக்ரம் சிந்தா, சதாம் உசைன், குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அசாருதீன், ‘khilafah GFX’ என்னும் முகநூல் பக்கத்தின் வழியாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை பரப்பியுள்ளார். மேலும், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தினை நடத்திய சஹரான் ஹாஷிம் உடன் முகநூல் நட்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் அனைவரும் சஹரானின் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அசாருதீன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஆஜர் படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இப்ராகிம், கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த திட்டமிட்டதாக கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரோடு நெருக்கமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

சோதனையின் போது , 14 அலைபேசிகள் , 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 மடிக்கணிணிகள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்டு டிஸ்க் டிரைவ்கள், 1 இன்டர்நெட் டாங்கில், 13 காணொளி தகடுகள், 300 ஏர் கன் பெல்லட்டுகள் மேலும், அதிகமான குற்றத்தை சுட்டிக் காட்டுகின்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

கோவையில் சோதனை

கைப்பற்றிய ஆவணங்கள், மற்றும் நபர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது என தேசிய புலனாய்வுத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், அல் அமீன் காலனி, சுண்ணாம்பு கால்வாய் , பொன்விழா நகர் ஆகிய இடங்களில், உள்ளூர் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்போடு புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையினைத் தொடங்கினர். சந்தேகத்திற்குட்பட்ட நபர்களின் வீடுகள், அலுவலகத்தில் சோதனை செய்தவர்கள் சந்தேகத்திற்குட்பட்ட நபர்களை தனியாக வைத்து விசாரித்து வருகின்றனர்.

முகமது அஸாருதீன் என்ற நபரின் மீது, கடந்த மே மாதம் 30ஆம் தேதி தேசிய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அசாருதீன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் கருத்துகளை பரப்புவதாகவும், இலங்கையினைப் போல் தமிழகம் ,கேரளா ஆகிய தென்னிந்திய பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஆள் சேர்த்தி வருகின்றனர் எனவும் குற்றசாட்டுகள் இருப்பதால் இது குறித்து புலனாய்வு விசாரணைகள் நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வுத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-BBC_Tamil

TAGS: