ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து சமூக நல திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். ஜெகன் ஆட்சியைப் பிடிக்க 9 நல திட்டங்கள் குறித்த அவரது வாக்குறுதியும் ஒரு காரணம் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
ஆந்திராவில் கடந்த மக்களவைத் தேர்தலோடு சேர்த்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி அமோக வெற்றி பெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தலில் 175 தொகுதிகளில் 151-ல் வென்று பெரும் வலிமையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளார் ஜெகன். மக்களவைத் தேர்தலிலும் 25 தொகுதிகளில் 22-ல் அவரது கட்சி வென்றது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிந்துபோனபிறகு இரண்டாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஜெகன் மோகன். கடந்த மே 30-ம் தேதி அவர் முதல்வராக பதிவியேற்றுக்கொண்டார்.
முதல்வர் பதவியேற்றவுடன் இரண்டாயிரம் ரூபாயாக இருந்த முதியோர் உதவித் தொகையை நான்கு வருடங்களில் நான்கு கட்டங்களில் மூவாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
முதல்வராக பதவியேற்ற ஒரு வாரம் கழித்து ஜூன் எட்டாம் தேதி 25 பேர் அவரது அமைச்சரவையில் இணைந்தனர். இதில் 14 பேர் அதாவது 56% பேர் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, மலைவாழ் மற்றும் இதர சிறுபான்மையினர்.
ஆந்திர அரசில் ஐந்து பேர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளனர்.
நவரத்னலு எனும் 9 நலத்திட்டங்கள்
1. ஒய்.எஸ்.ஆர் ரைது பரோசா
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ 50,000 நிதி உதவி அளிக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதாவது நான்கு ஆண்டுகளில் தலா ரூ.12,500 ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் வழங்கப்படும். மேலும் வட்டியில்லா கடன்கள், முதல் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு இலவச நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
ரூ 4,000 கோடி பேரிடர் நிவாரண நிதி, பகல் பொழுதில் 9 மணி நேர இலவச மின்சாரம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் இலவச குளிர் பதன கிடங்குகள், உணவு பதப்படுத்தும் மையங்கள் உள்ளிட்ட திட்டங்கள் விவசாயிகளின் நலன் பொருட்டு செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
2. பொறியியல் படிப்பவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசம்
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தபோது பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது முழு கட்டணத்தையும் திருப்பி அளிப்பதுடன் சேர்த்து, உணவு மற்றும் உறைவிட செலவுகளுக்கு ஆண்டுக்கு 20,000 இலவச நிதி உதவி வழங்கப்படும்.
கலந்தாய்வு வழியாக பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் 1 -1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான கட்டணம் அரசால் நேரடியாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும்.
3. ஆரோக்ய ஸ்ரீ
ஏழைகளுக்கு தரமான மருத்துவ சேவையை தருவதற்காக ஆந்திர மாநில அரசு செயல்படுத்திவரும் நல திட்டங்களில் முதன்மையானது ஆரோக்ய ஸ்ரீ
இந்த திட்டத்தின் கீழ் ஆரோக்ய ஸ்ரீ அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு அரசு மருத்துவமனையாக இருந்தாலும் தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏற்படும் அனைத்து மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்கும் என தேர்தலுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார்.
4. ஜலயாக்னம்
இந்த திட்டத்தின் கீழ் போலாவரம் திட்டம் உள்ளிட்ட நிறைவேற்றப்படாமல் உள்ள அனைத்து நீர்ப்பாசன திட்டங்களையும் அரசு நிறைவேற்றும்.
5. மதுவுக்குத் தடை
2024-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் முழுமையாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என அவர் வாக்குறுதி தந்தார். மாநிலம் முழுவதும் மூன்று கட்டங்களாக மது விற்பனை தடை செய்யப்படும் என்றார்.
6. அம்மாவொடி
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வெள்ளை நிற ரேஷன் கார்டு வைத்திருக்கும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.
7. ஒய்.எஸ்.ஆர் அசரா
பெண்கள் கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மேலும் 0% வட்டியில் கடன்கள் தரப்படும். 50,000 ரூபாய் வரை கடனுக்கான வட்டித் தொகை அரசாங்கத்தால் ஏற்கப்படும்.
ஒய்எஸ்ஆர் செயுதா திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் சிறுபான்மையினரில் 45 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு நான்கு ஆண்டுகளில் ரூ75 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.
8. ஏழைகளுக்கு வீடு
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித்தர ஒய் எஸ் ஆர் சி பி கட்சி உறுதியளித்தது. இந்த வீடுகள் பெண்களின் பேரில் பதிவு செய்யப்படும். அரசு 25 பைசா வட்டியில் அவர்களுக்கு கடன் வழங்குவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படும்.
9. ஓய்வூதியம்
ஓய்வூதியம் பெறுவதற்கான வயதுத் தகுதி 65-லிருந்து 60-ஆக குறைக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு மூவாயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
ஜெகன் பதவியேற்றதும் செய்ததென்ன?
மதுவிலக்கை அமல்படுத்துவதன் முதன் கட்டமாக சட்டத்துக்கு புறம்பான மதுக்கடைகளை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக ஜெகன் கூறுகிறார்.
கடந்த திங்கள்கிழமை நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக ஜெகன் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விஷயங்கள் குறித்து விசாரிக்க தனி விசாரணை குழு அமைக்கப்படும். ஊழல் வழக்கில் சிக்கும் அமைச்சர்கள் உடனடியாக நீக்கப்படுவர் என்றும் கூறியிருக்கிறார்.
ஊரக பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு பணியாளர்களுக்கான ஊதியம் மாதம் மூவாயிரத்திலிருந்து பத்தாயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்திருக்கிறார். மூத்தோர்களுக்கான மாத ஓய்வூதியத் தொகை இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்ட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதத்தில் இருந்து விவசாயிகள் ஆண்டுக்கு ரூ12,500 நிதி உதவி பெறும் திட்டம் செயல்படுத்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-BBC_Tamil