சென்னை: தலைநகர் சென்னையில் உரிய ஆவணங்கள் மற்றும் முறையான கண்காணிப்புகள் இல்லாமல் செயல்படும் தங்கும் விடுதிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள முகமது அப்துல்லா தெருவில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில், கடந்த திங்கட்கிழமை ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் விஷம் குடித்து உயிருக்க போராடினர். கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த இவர்களில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துவிட்டார். எஞ்சிய மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அதே போலி திருவல்லிக்கேணி மியர் சாலையில் உள்ள மற்றொரு தனியார் தங்கும் விடுதியில், காதல் ஜோடி ஒன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் கல்லூரி மாணவி பலியானார். காதலன் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்.
கல்லூாி முதலாமாண்டு பயிலும் மாணவியை அழைத்து வந்த காதலனிடம், எங்கிருந்து வருகிறார் என விசாரிக்காமலும், உரிய ஆவணங்களை வாங்காமலும் விடுதி ஊழியர்கள் தங்க அனுமதித்திருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர்.
இதே போல சென்னை பெரியமேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றிலும், கோவையை சேர்ந்த ஒருவர் தனது தாயுடன் கடந்த மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வந்து தங்கியிருந்தாா். என்ன காரணத்தினாலோ இருவரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளனர். இதில் மகன் பரிதாபமாக பலியானார்.
வேறு சம்பவத்தில் நேர்முக தேர்விற்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்த இளைஞர் ஒருவர் மிக அதிக அளவில் மது அருந்தியதால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் சென்னையில் உள்ள லாட்ஜ்களில் அடுத்தடுத்து நால்வர் தற்கொலை செய்து கொண்டதால், ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சென்னையில் திருவல்லிக்கேணி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள் உள்ளன. நட்சத்திர விடுதிகள் மற்றும் சொகுசு விடுதிகள் தவிர்த்து, நாளொன்றுக்கு ரூ.500 முதல் கட்டணம் வசூல் செய்யும் லாட்ஜ்கள் பட்ஜெட்டிற்கு அடக்கமாக உள்ளன.
சென்னைக்கு பல்வேறு காரணங்களுக்காக வரும் நடுத்தர வர்கத்தினர் இது போன்ற லாட்ஜ்களை தான் தேடி வருகின்றனர். இதனால் குறுகலான கட்டிடங்களில் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் இயங்கி வருகின்றன ஏராளமான தங்கும் விடுதிகள். மேலும் எவ்வித ஆவணங்களும் இன்றி வருபவர்களிடம் கூடுதல் காசு வாங்கி கொண்டு, தங்க அனுமதித்து விடுகின்றன இந்த பட்ஜெட் விடுதிகள்.
திருவல்லிக்கேணி மற்றும் பெரியமேட்டில் உள்ள லாட்ஜ்களில், பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் முறையற்ற ஜோடிகள் என பலரும் தஞ்சமடைவதாக கூறப்படுகிறது . ரோந்து காவலர்களும் முறையான சோதனைகளை நடத்துவதில்லை. இதனால் தங்குவதற்கு எளிதில் ரூம் கிடைப்பதால் பல்வேறு மனஉளைச்சல்களில் உள்ளவர்கள் இது போன்ற ரூம்களில் தங்கி தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.
இதனையடுத்து அனைத்து லாட்ஜ்களிலும் முறையான ஆவணங்களை சோதனை செய்த பிறகே, வருபவர்களை தங்களது விடுதிகளில் தங்க அனுமதிக்க வேண்டும் என விடுதிகளின் நிர்வாகத்தினரை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கடுமையாக எச்சரித்துள்ளனர்.