5 கோடி சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – மத்திய அரசு அறிவிப்பு!

5 கோடி சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறுபான்மை இன மாணவர்களை முன்னேற்றுவதற்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-

ஆண்டுக்கு 1 கோடி சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த வகையில் 5 ஆண்டுகளில் 5 கோடிப்பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

பொதுப்பள்ளிக் கல்வித்திட்டத்துக்கும், மதப்பள்ளி கல்வித்திட்டத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதப்பள்ளிக்கூடங்களில் இருந்தும், பொதுப்பள்ளிக்கூடங்களில் இருந்தும் இடையில் நின்ற மாணவிகளை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சேர்ப்பதற்கு ஏற்ற வகையில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் இணைப்பு படிப்பு வழங்கப்படும்.

மதப்பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு பொதுக்கல்வி நிறுவனங்கள் மூலமாக இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், கம்ப்யூட்டர் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் சிறப்பு பயிற்சி தரப்படும். எனவே இதன்மூலம் அவர்கள் மதப்பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு பொதுக்கல்வித்திட்ட பாடங்களை கற்பிக்க வழி பிறக்கும். இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்கிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறபோது, 2022-ம் ஆண்டில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக நிதி ஆயோக் ஒரு திட்டத்தை தீட்டி உள்ளது. அதில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக அந்த இன மாணவிகளுக்கு சமூக, பொருளாதார, கல்வி ஆகியவற்றில் அதிகாரம் வழங்க கவனத்தை செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த சிறுபான்மை இனத்தவருக்கு பேகம் ஹஸ்ரத் மகால் மாணவிகள் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 10 லட்சம் பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்க பயனாளிகள் அடையாளம் காணப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: