சென்னை: 30 ஆண்டுகளில் இல்லாத வறட்சியின் கோரப்பிடியில் சென்னை சிக்கித் தவித்து வருவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் இந்த கோடை காலத்தில் தமிழகம் கடும் வறட்சியை சந்தித்துள்ளது.
தமிழகத்துக்கு வருவதாக இருந்த ஃபனி புயல் வருவது போல் வந்து போக்கு காட்டி விட்டு ஒடிஸாவுக்கு சென்றது. இதனால் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.
நீர் நிலைகள்
இதனால் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்டன. குடிநீருக்காக இரவு பகல் பாராது மக்கள் தூக்கத்தையும் நிம்மதியையும் தொலைத்து விட்டு வெயிலையும் பொருட்படுத்தாமல் பல கி.மீ. தூரம் அலைந்து திரிந்து ஒரு குடம் தண்ணீரை கொண்டு வருகின்றனர்.
வானிலை மையம்
இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஒருவாரத்துக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெப்பநிலை 106 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடும் வறட்சி
மேலும் சென்னையில் 30 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. சென்னை கோடை மழை ஒருமுறை கூட பெய்யாமல் இருந்ததாக வரலாறு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்கு வெப்பம் நிலவும் என குறிப்பிட்டுள்ளதால் சென்னைவாசிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.