சந்திரயான் திட்டத்தை முன்னெடுத்த மயில்சாமி அண்ணாதுரையின் வாழ்க்கை பயணம் – திண்ணை முதல் நிலவு வரை

“வகுப்பு ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நான் மாட்டு சாணத்தை அள்ளியதுண்டு. ஆனால், அதன் துர்நாற்றத்திலிருந்து முற்றிலுமாக தப்பிக்க இயலவில்லை.”

கடும் சவால் நிறைந்த விண்வெளித் துறையில் இருப்பவர்கள் பெற்றுள்ள கல்வி சார்ந்த அனுபவத்தை மயில்சாமி பெற்றிருக்கவில்லை.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் மிக முக்கியமான நிலவு மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் மயில்சாமியின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இவர் பள்ளிக் கல்வியின் பாடங்களை மரத்தடியிலும், கோயில்களின் திண்ணைகளிலும், மாற்றியமைக்கப்பட்ட மாட்டு கொட்டகைகளிலுமே பயின்றார்.

இப்படிப்பட்ட வாழ்க்கை சூழலை கொண்டிருந்த மயில்சாமி எப்படி இந்திய விண்வெளித்துறையின் முக்கிய விஞ்ஞானியாக உயர்ந்தார்?

அமெரிக்காவும் ரஷ்யாவும்

தனது இளமைக் காலத்தில் காலணிகூட இல்லாமல் வலம் வந்த மயில்சாமி எட்டு வயதை அடையும்போதுதான் அவரது கிராமத்திற்கு மின்சாரம் வசதி கிடைத்தது.

ஆனால், அதே காலக்கட்டத்தில், அதாவது 1960களில் அமெரிக்காவும் அதன் முக்கிய போட்டியாளருமான ரஷ்யாவும் விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.

அச்சமயத்தில், விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் தனது முதல் செயற்கைக்கோளை (1963ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி) விண்வெளியில் செலுத்தியிருந்தது. ஆனால், அது இந்தியர்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொத்தவாடி எனும் கிராமத்தில் பிறந்து, வளர்ந்த மயில்சாமி உள்பட அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த இந்தியர்களுக்கு போதுமான கல்வியும், சுகாதார வசதியும் கிடைக்கவில்லை.

படிப்பில் மிளிர்ந்த மயில்சாமி

சந்திரயான் திட்டத்தை முன்னெடுத்த மயில்சாமி அண்ணாதுரையின் வாழ்க்கை பயணம்

குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை, மயில்சாமியின் படிப்பு திறனை எவ்வகையிலும் மட்டுப்படுத்தவில்லை. பொதுவாகவே, அறிவியலிலும், கணிதத்திலும் மிகுந்த ஆர்வத்தோடு திகழ்ந்த மயில்சாமிக்கு வரலாறு பாடம் மட்டும் பிடித்திருக்கவில்லை.

“எப்படி வரலாறு படைப்பது என்பதற்காகவே நாம் வரலாறு படிக்க வேண்டும் என்று அப்போது எனது தந்தை கூறுவார்,” என்று பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

பள்ளி ஆசிரியராக பணியாற்றிய மயில்சாமியின் தந்தையின் வருமானம் குடும்பத்தின் தேவைக்கு போதுமானதாக இருந்தது. இச்சூழ்நிலையில், மயில்சாமி பள்ளிக்கல்வியை முடிந்த பிறகு, மேற்கல்வியை பயில்வார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படிப்பட்ட நேரத்தில், அரசின் உதவித்தொகை ஒன்று தனக்கு கிடைத்ததாக கூறுகிறார் அவர்.

“எனக்கு அப்போது சுமார் 12 வயதிருக்கும். அச்சமயத்தில், கிராமப்புற மாணவர்களுக்கு அரசு அளிக்கும் உதவித்தொகை குறித்து தெரியவர, அதற்கு விண்ணப்பித்தேன். ஆச்சர்யமளிக்கும் வகையில் எனது விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆண்டிற்கு 1,000 ரூபாய் வழக்கப்பட்டதை பயன்படுத்தி அருகிலுள்ள மற்றொரு பள்ளியில் சேர்ந்தேன்” என்று மயில்சாமி கூறுகிறார்.

மேல்நிலை கல்வியில் மாநில அளவில் 39ஆவது இடத்தை பிடித்த மயில்சாமி, மாவட்ட அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

ஆரம்பகால போராட்டங்கள்

மயில்சாமி அண்ணாதுரை தனது மேல்நிலை கல்வியை முடித்துவிட்டு, பொறியியல் படிப்பில் சேர்ந்த அதே சமயத்தில், அதாவது 1975ஆம் ஆண்டு ரஷ்யாவின் உதவியுடன் இந்தியா ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்தியது.

ஆர்யபட்டாவிலிருந்து சிக்கனல்களை பெறுவதற்காக அவசர அவசரமாக பெங்களூரிலுள்ள விண்வெளி மையத்தின் கழிவறைகள் தரவு மேலாண்மை மையங்களாக மாற்றப்பட்டன. ஆறு மாதங்கள் வரை செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் வெறும் நான்கு நாட்களே செயல்பட்டது.

அடுத்த நான்காண்டுகளுக்கு பிறகு, முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டும் தோல்வியடைந்தது.

1980களின் தொடக்கத்தில் மயில்சாமி இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.

சந்திரயான் திட்டத்தை முன்னெடுத்த மயில்சாமி அண்ணாதுரையின் வாழ்க்கை பயணம்

“அப்போது, இஸ்ரோ முன்னரே வகுத்திருந்த திட்டத்தின்படி, நான்காண்டுகளுக்கு ஒரு முறையே செயற்கைகோள்களை ஏவி வந்தது.”

“எனக்கு அப்போது தமிழ் மொழி மட்டுமே நன்றாக தெரியும் என்பதால், எனது ஆங்கிலத்தை கேட்டு சிலர் சிரித்ததுண்டு.”

பூமிக்கு மேலே 400 கி.மீ. சுற்றுவட்ட பாதையில் வலம் வரும் செயற்கைக்கோளே வடிவமைப்பதே இவரது பணியாற்றிய முதல் திட்டம். ஆனால், விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் வங்காள விரிகுடாவில் விழுந்தது.

நிலவை நோக்கி…

மயில்சாமியின் தொடக்க காலம் தோல்வியை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், அதற்கடுத்து இந்தியாவின் வானிலை கண்காணிப்பு, ஒளிபரப்பு முதல் இயற்கை வள மேலாண்மை வரையிலான பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்ட எட்டு இன்சாட் செயற்கைக்கோள்களை உருவாக்கிய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஏற்படுத்திய சந்திரயான்- 1 திட்டத்தின் திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை 2004ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

“இதற்கு முந்தைய திட்டங்கள் நிலவில் ஆராயாத பகுதிகளை சென்றடைய வேண்டும் என்பதே எங்களது ஒரே நோக்கமாக இருந்தது. அதுமட்டுமின்றி, நிலவில் எப்படி தண்ணீர் உருவானது, எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பது போன்றவற்றையும் நாங்கள் கண்டுபிடிக்க விரும்பினோம்” என்று அவர் கூறுகிறார்.

2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மழைமேகங்கள் சூழ்ந்திருந்த ஒரு நாளில் சந்திரயான் – 1 விண்கலம் விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது. இந்தியாவின் தேசிய கொடியை நிலவில் நிறுத்திய அது, நிலவில் தண்ணீர் இருப்பதையும் உறுதி செய்தது.

சந்திரயான் திட்டத்தை முன்னெடுத்த மயில்சாமி அண்ணாதுரையின் வாழ்க்கை பயணம்

ஒருபுறம் சந்திரயான் – 1இன் வெற்றியை இந்திய ஊடகங்கள் கொண்டாடினாலும், மறுபுறம் கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையில் வாடி வரும் நிலையில் இது தேவையா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

ஆனால், இதுகுறித்து மயில்சாமி தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கிறார். “தொழிற்புரட்சியில் ஒட்டுமொத்த நாடும் பங்கேற்காததே தற்போது நிலவும் வறுமைக்கு முக்கிய காரணம். இவ்வளவு பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ள நாடு, விண்வெளித்துறையில் கால்தடம் பதிப்பதற்குரிய வாய்ப்புகளை அப்படியே விட்டுவிட முடியாது.”

செவ்வாய் கிரக ஆராய்ச்சி

அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு, இவரது தலைமையிலான குழுவே, செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் தனது முதல் முயற்சிலேயே வெற்றிபெற்ற முதல் நாடாக இந்தியா உருவெடுப்பதற்கு காரணமாக அமைந்தது.

“நிலவை நோக்கிய பயணத்தில், செயற்கைகோள் நொடிக்கு 1 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் செல்ல வேண்டிருந்த நிலையில், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு நொடிக்கும் 30 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் செயற்கைக்கோளை தயாரிக்க வேண்டியிருந்தது. இதை சாத்தியமாக்குவதற்கு எண்ணிலடங்கா திட்டமும், நேரமும் தேவைப்பட்டது.”

சுமார் 73 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்திற்கான செயற்கைக்கோள் பத்தரை மாத பயணத்திற்கு பிறகு, செவ்வாயை அடைந்தது.

சந்திரயான் திட்டத்தை முன்னெடுத்த மயில்சாமி அண்ணாதுரையின் வாழ்க்கை பயணம்

“என்னுடைய வழிகாட்டி பேராசிரியர் ராவிடம் நான் இவ்வாறாக கூறினேன் – ஆர்யபட்டாவின் புகைப்படம் இரண்டு ரூபாய் நோட்டில் இடம்பெற்றது. ஆனால், மங்கள்யானின் படம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ளது. நாங்கள் 1,000 மடங்கு வளர்ந்திருக்கிறோம்” என்று அவர் கூறுகிறார்.

எனினும், சந்திரயான் – 1 திட்டத்திற்கு பிறகான காலக்கட்டத்தில் சர்வதேச விண்வெளித்துறை மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்டுகள் போன்ற ஒன்றை இஸ்ரோவும் உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக மயில்சாமி கூறுகிறார்.

சந்திரயான் – 2

சந்திரயான் – 1ஐ ஏவிய 11 ஆண்டுகளுக்கு பிறகு, சந்திரயான் – 2ஐ அடுத்த மாதம் 15ஆம் தேதி விண்ணில் ஏவு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன் 2 விண்கலம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அதாவது, தரையிறங்குவதற்காக உள்ள ஒரு கலனையும் (லேண்டர்), சுற்றுவட்டப்பாதையிலிருந்து ஆய்வு செய்வதற்காக செயற்கைகோள் போன்ற ஒரு கலனையும் (ஆர்பிட்டர்), நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக ஒரு வாகனத்தையும் (ரோவர்) கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க காலத்தில் மயில்சாமி அதற்கு தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இதுவரை இஸ்ரோ கையாண்டதிலேயே இதுதான் மிகவும் சவாலானது” என்று அவர் கூறுகிறார்.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், அமெரிக்கா, அன்றைய சோவியத் யூனியன், சீனாவுக்கு அடுத்து நிலவில் தரையிறங்கும் நான்காவது நாடு என்ற பெயரை இந்தியா பெறும். அதுமட்டுமின்றி, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் நாடாக இந்தியா உருவெடுக்கும்.

சந்திரயான் திட்டத்தை முன்னெடுத்த மயில்சாமி அண்ணாதுரையின் வாழ்க்கை பயணம்
மீண்டும் பயன்படுத்த கூடிய ராக்கெட் தயாரிப்பில் இஸ்ரோ

அங்கீகாரம்

இஸ்ரோவில் தான் பணியாற்றும்போதே சந்திரயான் – 2 விண்ணினில் ஏவப்படுவதை காண வேண்டுமென்று மயில்சாமி அண்ணாதுரை விரும்பினார். இருப்பினும், அது நிறைவேறாமலே கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் பணி ஓய்வு பெற்றுவிட்டார்.

விண்வெளியை எவ்வித பிரச்சனையும் இன்றி அமைதியாக காப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக உருவாக்கப்பட்ட குழுவொன்றின் தலைவராக மயில்சாமி விளங்கினார். இந்திய நாட்டின் உயரிய உரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ உள்பட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விருதுகளை வென்றுள்ளார்.

தனது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட சொந்த கிராமத்திற்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர், தனது பள்ளிக்கூடத்தை சீரமைப்பதற்கும் நிதி திரட்டி கொடுத்துள்ளார்.

‘வரலாற்றை படைக்கிறோம்’

சந்திரயான் திட்டத்தை முன்னெடுத்த மயில்சாமி அண்ணாதுரையின் வாழ்க்கை பயணம்

இஸ்ரோவிலிருந்து பணி ஓய்வு பெற்றதும், எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வரும் மயில்சாமி, தான் எப்போதும் பணத்தை மையமாக கொண்டு செயல்பட்டதில்லை என்று கூறுகிறார்.

“நாங்கள் சந்திரயான் – 1 திட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, என்னுடைய அணியினரிடம் இவ்வாறு கூறுவேன்: ‘இது மற்றொரு வேலை என்று நினைத்துவிடாதீர்கள்; நாம் வரலாற்றை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.'”

மயில்சாமி தனது பள்ளிக்காலத்தில் வரலாறு பாடத்தை விரும்பாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கை பயணத்தை தற்போது தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள் பாடமாக படித்து வருகிறார்கள். -BBC_Tamil

TAGS: