பீகாரின் முசாபர்பூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை அங்கு நிலவும் கடும் வெயில் மட்டுமின்றி தங்களது குழந்தைகளை இழந்த 90க்கும் மேற்பட்ட தாய்மார்களின் சூடான கண்ணீரினாலும் வெப்பமுடன் காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் அந்நகரத்தில் பரவிய மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நேற்று இந்த மருத்துவமனையை பார்வையிடுவதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சென்ற சமயத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.
அந்த மருத்துவமனையின் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை அறையின் வெளியே கேட்கும் அழுகுரலை கண்ணாடியால் தடுக்க முடியவில்லை.
வாழ்வா, சாவா என்று உயிருக்கு போராடி கொண்டிருக்கும் தனது ஐந்து வயது மகள் முன்னியை வெறித்து பார்த்துக் கொண்டே கதறி அழுகிறார் பபியா தேவி.
மூளை காய்ச்சலால் இந்த மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 93 குழந்தைகளுக்கு ஏற்பட்ட முடிவு தனது குழந்தைக்கும் நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார் அவர். ஏனெனில், முன்னி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
சிறிது நேரத்தில், மோசமடைய ஆரம்பித்த முன்னியின் உடல்நிலையை அங்கிருந்த மருத்துவ கருவிகள் வெளிப்படும் ஒலிகள் உறுதிசெய்தன. உடனே, ஓடோடி வந்த மருத்துவர்கள் சிபிஆர் எனும் இருதய புத்துயிர் செயல்முறையின் மூலம் முன்னியின் மார்பு பகுதியில் அழுத்தம் கொடுத்து அவரது உயிரை தக்கவைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
அந்த ஒவ்வொரு தருணமும், முன்னியின் முகம் மேல்நோக்கி சென்று, பிறகு கீழே விழுகிறது. அதே சமயத்தில், தனது மகளின் நிலையை கண்டு தாங்க முடியாமல், போஜ்புரி மொழியில் நாட்டுப்புற பாடலொன்றை இதயத்தை பிளக்கும் ஒலியில் பாடுகிறார்.
முன்னியின் உடல்நிலை குறித்து பபியாவிடம் கேட்டபோது, தனது குழந்தை உயிர் பிழைக்காது என்று கூறிவிட்டதாக கூறுகிறார். ஆனால், முன்னிக்கு என்ன நேர்ந்தது? எப்படி இந்த நிலைக்கு ஆளானார்? என்று அவரது தாயாரிடம் வினவியபோது, “என் மகள் கடந்த வெள்ளிக்கிழமை வரை நன்றாக விளையாடி கொண்டிருந்தாள். ஆனால், சனிக்கிழமை காலை அவளை தொட்டு பார்த்தபோது கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு கொண்டிருந்தாள். உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடினோம். தொடர்ந்த அவளது உடல்நிலை மோசமடைந்ததால், பிறகு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலை பத்து மணியளவில் மருத்துவமனையை அடைந்தோம். ஆனால், மருத்துவமனையில் சேர்த்த பிறகும் அவளது உடல்நிலை சிறிதுகூட முன்னேற்றமடையவில்லை. அப்போதிலிருந்து இதுவரை அவள் கண்ணை திறக்கவே இல்லை,” என்று அவர் கூறுகிறார்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த பிரச்சனைக்கான காரணம் குறித்து மருத்துவர்களிடையே வேறுபட்ட கருத்து நிலவுகிறது. அதாவது, ஒருவித மூளை காய்ச்சலான இது லிச்சி பழத்தால் ஏற்பட்டதாக ஒரு தரப்பினரும், குழந்தைகளின் உடலிலுள்ள குறைந்தளவு குளுக்கோசே இதற்கு காரணமென்றும் சிலர் வாதிடுகின்றனர்.
இந்நிலையில், முசாபர்பூர் சம்பவத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்கிறார் வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்கள் போன்றவற்றில் நீண்டகால அனுபவமுள்ள மருத்துவர் மாலா கனேரியா.
“குழந்தைகளின் இறப்பிற்கான காரணத்தை எளிதாக கூறிவிட முடியாது. ஏனெனில், லிச்சி பழத்திலுள்ள நச்சுகள், ஊட்டச்சத்தின்மை, சர்க்கரை மற்றும் சோடியத்தின் அளவு, மற்ற ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை காரணமாக இருக்கலாம்.
அதாவது, உடலில் குறைந்தளவு குளுக்கோஸ் அளவு கொண்ட குழந்தைகள், இரவில் வெறும் வயிற்றுடன் தூங்கிவிட்டு, காலையில் லிச்சியை வெறுமனே சாப்பிட்டால் மூளை காய்ச்சல் ஏற்படக் கூடும். ஆனால், லிச்சி பழங்கள் மட்டுமே இதற்கு காரணமென்று கூறிவிட முடியாது. இந்த இறப்புகளை பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், முசாபர்புர் பகுதியில் பெருமளவில் லிச்சி பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. அந்த பகுதியை சுற்றிலுள்ள கிராமங்களில் லிச்சி பழத்தோட்டங்களை சர்வசாதாரணமாக காண முடியும்.
நிலைமை இவ்வாறு சென்றுக்கொண்டிருக்க, பக்கத்திலுள்ள மற்றொரு அறையிலிருந்து பயங்கரமான அழுகுரல் கேட்டதை அடுத்து நேரில் சென்று பார்த்தேன். தனது நான்கு வயது மகள் தமன்னாவின் உயிர் கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாக பிரிவதை கண்டு, துக்கத்தை தாளாமல் அழுது கொண்டே, மருத்துவமனையின் சுவர்களில் தனது கைகளை இடித்து வளையல்களை நொறுக்குகிறார் ரூபி காடூன்.
சிறிது நேரத்திற்கு பின்னர் பேசிய அவர், “காய்ச்சலின் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு குழந்தை கூட உடல் நலம் பெற்று வீடு திரும்பவில்லை. அனைவரும் உயிரிழந்து விட்டனர். ஆனால், இவர்கள் கூறுவதை போன்று, எனது குழந்தை ஒரு லிச்சி பழத்தை கூட உண்ணவில்லை.
அவ்வப்போது குழந்தையை வந்து பார்த்து செல்லும் மருத்துவர்கள், தங்களுக்குள்ளே பேசி கொள்கிறார்களே தவிர, என்னிடம் எதுவும் விளக்கவில்லை” என்று அவர் கூறுகிறார்.
அதையடுத்து, நான் மருத்துவமனையின் மற்ற பகுதிகளை சுற்றி வரும்போது, பலரது கைகளிலும் தண்ணீர் பாட்டில்களை காண முடிந்தது. இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, ஒட்டுமொத்த மருத்துவக் கல்லூரியிலும் ஓரிடத்தில் கூட குடிநீர் குழாய்கள் இல்லை என்பதும், உயிருக்கு போராடி கொண்டிருக்கும் குழந்தைகள் உள்ளிட்ட எல்லாருக்கும் தேவையான தண்ணீர் மருத்துவமனைக்கு வெளிப் பகுதியிலுள்ள அடி குழாயிலிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதும் தெரியவந்தது.
இந்த பிரச்சனை குறித்து செய்தியாளர் சந்திப்பில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் கேட்டபோது, மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் இல்லாததது, மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு ‘ஒரு சிக்கலான பிரச்சினை அல்ல’ என்று கூறினார். -BBC_Tamil