தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ – விரிவான தகவல்கள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டுவிட்ட நிலையில், புதிய நீர் ஆதாரங்களைத் தேடுகிறது சென்னைக் குடிநீர் வாரியம். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்தக் குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக, புதிதாக ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதும் ஏற்கனவே இருக்கும் கிணறுகளை ஆழப்படுத்துவதும் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. பொதுவாக ஒரு மாதத்தில் 20-30 வரை ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் ஒரு நிறுவனம், கடந்த இரு மாதங்களாக 40 ஆழ்துளை கிணறுகள் வரை அமைப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை நகரைப் பொறுத்தவரை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளுமே முற்றிலுமாக வறண்டுவிட்டன. மே மாதத் துவக்கத்தில் சோழவரம் ஏரியிலிருந்தும் செங்குன்றம் ஏரியிலிருந்தும், மே மாத மத்தியில் பூண்டி ஏரியிலிருந்தும், தண்ணீர் எடுப்பதை சென்னைக் குடிநீர் வாரியம் முழுமையாக நிறுத்திவிட்டது.

இதற்குப் பிறகு சென்னைக்கு அருகில் உள்ள குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. தற்போது சிக்கராயபுரம், எருமையூர் குவாரிகளில் இருந்து சிறிதளவு தண்ணீர் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டுவருகிறது.

தற்போது வீராணம் ஏரியிலிருந்து சுமார் 150 மில்லியன் லிட்டர் அளவுக்கு நீர் பெறப்பட்டுவருகிறது. மேலும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படும் நீரின் அளவை அதிகரிக்கவும் சென்னைக் குடிநீர் வாரியம் முடிவுசெய்திருக்கிறது.

மழை எனும் மீட்பன்

“தற்போது மேலும் சில குவாரிகளை அடையாளம் காணும் பணிகள் நடந்துவருகின்றன. மழை மட்டுமே இந்தச் சிக்கலில் சென்னை நகரை மீட்க முடியும்”   என்கிறார் சென்னைக் குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

'கழிவுநீரே இனி குடிநீர்': தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்

சென்னை நகரைப் பொறுத்தவரை 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த 15 மண்டலங்களிலிலும் சேர்த்து, ஒரு நாளைக்கு 880 மில்லியன் லிட்டர் தண்ணீரை சப்ளை செய்வதாக சொல்லப்பட்டாலும் பொதுவாக 650 மில்லியன் லிட்டர் தண்ணீரே வழங்கப்பட்டுவந்தது. தற்போது கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக சென்னைக் குடிநீர் வாரியம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறது. ஆனால், விநியோகத்தின் போது ஏற்படும் இழப்பீடு ஆகியவற்றை கணக்கிட்டால், விநியோகிக்கப்படும் நீரின் அளவு சுமார் 425 – 450 மில்லியன் லிட்டர் அளவே இருக்கும்.

இதன் காரணமாக சென்னை நகரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் இருந்து தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் பல இடங்களில் பொதுமக்களுக்குள் சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படுவது வழக்கமாகியிருக்கிறது.

ஐ.டி நிறுவனங்கள், உணவகங்கள்

தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன.  மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றன.  ஆனால், நிலைமை இன்னும் மோசமாகக்கூடும்.

“வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், வாய்ப்பிருப்பவர்களை வீட்டில் இருந்தப்படி பணி செய்ய சொல்லி இருக்கிறது மென் பொருள் நிறுவனங்கள். ஆனால், வீட்டிலும் நீர் இல்லாத போது எங்கிருந்து பணி செய்ய?” என்கிறார் தகவல் தொழிநுட்ப பணியாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் விநோத் களிகை.

தாகமும், வன்முறையும்

தண்ணீர் பிரச்சனை தனி மனித உறவுகளிலும் தாக்கம் செலுத்தி இருக்கிறது.

தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் சண்டைகளும் நடந்துள்ளன.

தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: 'கழிவுநீரே இனி குடிநீர்' - விரிவான தகவல்கள்

தமிழக சட்டசபை சபாநாயகர் ப. தனபாலின் வாகன ஓட்டுநர் ஆதிமூலம் ராமகிருஷ்ணன் தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண்மணியை கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கி உள்ளார். இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மாநில தலைநகரில் மட்டும் அல்ல தண்ணீர் பிரச்சனை. காவிரி நதி பாயும் டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நிலையும் இதுதான்.

அங்கு தண்ணீர் பிரச்சனையில் ஆனந்த் பாபு எனும் நபர் கொல்லப்பட்டிருக்கிறார்.

“தஞ்சாவூர் மாவட்டம் விளார் பகுதியில், தண்ணீர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, அந்தப் பகுதியை சேர்ந்த குமார் எனும் நபர் அதிக குடங்கள் பிடிக்க, இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் ஆனந்த் பாபு. இதனால் கோபமடைந்த குமார் மற்றும் அவரது இரு மகன்கள் ஆனந்த் பாபுவை தாக்கி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார்கள்” என்கின்றனர் போலீஸார்.

நிலத்தடி நீர்மட்டம்

‘மழைக்காலத்திற்குப் பிறகு, ஏரிகள் எல்லாம் நிறைந்திருக்கும்போது குடிநீர் வாரியம் ஒரு நாளைக்கு சராசரியாக 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குகிறது என்றால், அந்த நேரத்தில் நிலத்தடி நீர்மட்டமும் நன்றாக இருக்கும். அதனால், குடிநீர் வாரியத்தின் பணிகள் எளிதாக இருக்கும். ஆனால், தற்போது நகரின் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டமும் வற்றிவிட்ட நிலையில், முழுக்க முழுக்க மக்கள் குடிநீர் வாரியத்தையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இது நிலைமையை மேலும் கடுமையாக்கியிருக்கிறது’ என்கிறார் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர்.

'கழிவுநீரே இனி குடிநீர்': தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்

சென்னையில் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் குறையவில்லை, ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாத காலக்கட்டத்தில் மட்டும் தூத்துக்குடி திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மட்டும் கணிசமான அளவில் குறைந்திருக்கிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 0.87 மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர் அளவு குறைந்திருக்கிறது என்று தரவுகள் கூறுகின்றன.

குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதுபோக, லாரிகள் மூலமும் தண்ணீர் விநியோகம் செய்கிறது குடிநீர் வாரியம். ஒரு நாளைக்கு 9,000 லாரிகள் நீர் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்குப் பணம் செலுத்தி லாரி நீரைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும், பதிவுசெய்தால் குறைந்தது 20 நாட்களாவது காத்திருக்க வேண்டியிருக்கிறது.  வரும் நாட்களில் இந்தக் காத்திருப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.

“இப்போதுதான் பேரழிவு துவங்கியிருக்கிறது. இந்த ஆண்டும் மழை பெய்யாவிட்டால் முழுமையான பேரழிவை சந்திப்போம்” என்கிறார்கள் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள்.

மாற்றம் வேண்டும்

இப்போது நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு நிலத்தடி நீரை மேம்படுத்துவதே ஆகும் என்கிறார் நீர் செயற்பாட்டாளர் நக்கீரன்.

தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: 'கழிவுநீரே இனி குடிநீர்' - விரிவான தகவல்கள்

“இதற்கு முன்பும் இவ்வாறு மழை இல்லாமல் இருந்திருக்கிறது. இது போன்ற வறட்சியை சென்னை சந்தித்து இருக்கிறது. அப்போதெல்லாம், நிலத்தடி நீர் கை கொடுத்தது. இப்போது நிலத்தடி நீரும் கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது. பெய்கின்ற மழையில் 16 சதவீதமாவது நிலத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் 5 சதவீதம் கூட நிலத்திற்குள் செல்வதில்லை. அதற்கு காரணம், முழுக்க முழுக்க கான்கிரீட்மயமான கட்டுமானம். இதில் மாற்றம் கொண்டுவராமல் நிலத்தடி நீரை மேம்படுத்துவதும் சாத்தியமில்லை” என்கிறார் நக்கீரன்.

கழிவு நீர்

ஏரிகளை முழுமையாகத் தூர்வாருவது, கடல் நீரைச் சுத்திகரிக்கும் மையங்களை அமைப்பது போன்றவை நிரந்தரமான தீர்வாக இருக்காது என்கிறார்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள். ஏற்கனவே பயன்படுத்திய நீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதே சரியான, நீடித்த தீர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் அவர்கள்.

சென்னை நகரின் கழிவு நீரைச் சுத்திகரித்து வழங்கும் திட்டத்திற்கான முதற்கட்ட தொழில்நுட்ப அங்கீகாரத்தை சென்னை ஐஐடி மே 30ஆம் தேதி வழங்கியிருக்கிறது.  இதையடுத்து இதற்கான இயந்திரங்களை வடிவமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வர ஜனவரி மாதம் ஆகிவிடும்.

இந்த கழிவு நீரைச் சுத்திகரிக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படும்பட்சத்தில் சென்னை நகரின் கழிவுநீரில் 70 சதவீதத்தை மீண்டும் குடிநீராக்கி விநியோகிக்க முடியும். -BBC_Tamil

TAGS: