தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு அரசின் நடவடிக்கை என்ன? – உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் நீர் மேலாண்மை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது என்கிறது தினமணி செய்தி.

சென்னை உயர்நீதிமன்றத்தில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இயற்கை மற்றும் நீர்வளப் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், பாலாற்றில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் இந்தக் கால்வாயின் வழியாக தண்ணீர் எளிதாகச் செல்ல வழிவகை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோயிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தைப் போக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, ஏரிகளில் நீர் இல்லை என இப்போது கூறும் அதிகாரிகளுக்கு நாள்தோறும் நீரின் அளவு குறைந்து வருவது தெரியாதா, இந்த விவகாரத்தில் அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, தமிழக அரசிடம் நீர் மேலாண்மை தொடர்பாக எந்தத்திட்டமும் இல்லை நீர்நிலைகளைத் தூர்வார் வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்ட்து, அது தொடர்பான விவரங்கள் இந்த அறிக்கையில் இல்லை

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காண மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன, ஏரி குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகள் வறண்டு வந்த நிலையில் அதற்காக இதுவரை மாற்று ஏற்பாடுகளை செய்யாதது ஏன் முன்னெச்சரிக்கையாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல் வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர் என விவரிக்கிறது அந்த செய்தி.

தினமணி

TAGS: