சென்னை: சென்னை, டெல்லி, பெங்களூர் உள்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர் இருக்காது என நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் தண்ணீருக்கான தேடலில் இருக்கிறது. வாட்டி வதைக்கும் வெப்பத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் கடும் வறட்சி நிலவுகிறது.
வாடிக்கை
இதனால் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இந்த தண்ணீர் பிரச்சினையை போக்க ஒரே வழி நதி நீர் இணைப்பு என்கிறார்கள். ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரை குறை சொல்வதும் எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியை குறை சொல்வதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
அறிக்கை
இந்தியாவே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில் நிதி ஆயோக் ஒரு பகீர் தகவலை அளித்துள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
40 சதவீதம்
டெல்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது. இந்த விவகாரத்தால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவர். மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேருக்கும் குடிநீர் வசதி இருக்காது. எனவே தண்ணீரை வீணாக்காமல் சேமித்து வைக்க வேண்டும்.
மெட்ரோ நகரங்கள்
சென்னையில் உள்ள 3 ஆறுகள், 4 நீர் நிலைகள் முற்றிலும் வறண்டுவிட்டது. ஆனால் சென்னையை விட மற்ற மெட்ரோ நகரங்களில் நீர் ஆதாரங்களும் மழையும் அதிகமாக இருக்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்போதே தண்ணீர் பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நிதி ஆயோக்கின் இந்த அறிக்கை 21 நகர மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.